(க.விஜயரெத்தினம்)
தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தினை நக்கவைத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு கூட்டிவந்தது அவரது கால்களை நக்கவா என கேள்வியெழுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் காட்டம்.லொஹான் ரத்வத்தை ஒரு கனவான் அரசியல்வாதியல்ல,கழிசறை அரசியல்வாதியெனவும் தெரிவித்தார்.
நேற்றுமட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
காணமல்போனோருக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் அவரது மகன் ஆகியோர் எங்கே எனவும் கேள்வியெழுப்பிய அவர் அவ்வாறானால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்களா? எனவும் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் கொலைக்குற்றவாளியென்பதை ஏற்றுக்கொள்கின்றது என்பதே அதன் அர்த்தம் எனவும் தெரிவித்தார்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு தமிழ் தேசிய அரசியல் வரலாறு தெரியாது எனவும் அவர்கள் மாவை சேனாதிராஜாவிடம் கற்கவேண்டும் எனவும் கன்றுக்குன்டி அரசியல் செய்யவேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு நேற்றைய நாள் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கடந்த சில நாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் பேசப்பட்டவர்.அவர் நேற்றையதினம் மட்டக்களப்புக்கு வந்து கட்சி அரசியலில் ஈடுபட்டிருக்கின்றார்.பொதுஜன பெரமுன மட்டக்களப்பு அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுச்சென்றுள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலையில் மதுபோதையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன்பாக முழந்தாழிட வைத்து துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை,அதற்கும் மேலாக தமிழ் அரசியல்கைதிகளை தனது சப்பாத்தினை நக்குமாறு கோரி அவமானப்படுத்தியவரை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து சந்திப்பினை மேற்கொண்டதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் தந்தையார் அனுரத்த ரத்வத்தை நான் பாராளுமன்ற உறுப்பினராக 1989 ஆம் ஆண்டு இருந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் இருந்தவர்.சிறிமா பண்டாரநாயக்கவுடன் நெருங்கி செயற்பட்டவர்,சந்திரகாவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சராகயிருந்தவர்.1989ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க வெல்வதற்கு விடுதலைப்புலிகளிடம் சென்று ஆதரவு கோரியவர்.தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு தமிழர்களின் ஆதரவு வேண்டும்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தல் காலத்தில் கண்டியில் 11முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்த தகப்பனும்;மகனும் தொடர்புபட்டவர்கள்.இவ்வாறான செயல்கள் ஊடாக அரசியல் நடாத்துபவர்கள்.இவ்வாறான நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளை தனது சப்பாத்தினை நக்கவைத்த இவரை மட்டக்களப்புக்கு அழைத்து அவரது சப்பாத்தினை நக்குவதற்காக கூட்டிவந்தீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் எழுப்புகின்றேன்.ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இந்த கேள்வியை கேட்கின்றனர்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கனவான் அரசியல்வாதியல்ல.கழிசறை அரசியல்வாதி.அந்த அரசியலை இங்குகொண்டுவரவேண்டும்.அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இருவர்.ஓருவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மற்றவர் விமல்வீரவங்ச. சரத் வீரசேகர கூறுகின்றார் அவர் கையில் வைத்திருந்தது அனுமதிபெற்ற துப்பாக்கியென்று.அவ்வாறானால் அனுமதிபெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் கொலை மிரட்டல் செய்யலாமா? கொலைதான் செய்யலாமா?.மற்றையவர் விமல்வீரவன்ச இவர் இலங்கையின் முதல் தர இனதுவேச அரசியல்வாதி.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அவரை மட்டக்களப்புக்கு ஆவழைத்து மாலை மரியாதைசெய்து அவரை நல்லவராக காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஊடாக 2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆரம்பிக்கும் முயற்சியை எடுத்தபோது முதன்முதலாக பத்திரிகையாளர்கள் அணுகிய கட்சியாக தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது.அதனை தொடர்ந்தே ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்தது.தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது.ஆயுதப்போராட்ட இயக்கங்களில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக தமிழீழ விடுதலை இயக்கம் உள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்கூட இதில் இருந்ததாக வரலாறுகள் உண்டும்.வீடியோ பதிசெய்துகொண்டு முதன்முதலாக தாக்குதல் நடாத்திய இயக்கமாகவும் எமது இயக்கம் இருக்கின்றது.1984ஆம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தினை தாக்கி முற்றுமுழுதாக நிர்முலமாக்கியது தமிழீழ விடுதலை இயக்கம்.
ஆனால் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மையாகும். கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து 2001ஆம் ஆண்டிலே நாங்கள் ஒன்றாகினோம். ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்து அரசியற் கட்சியாக போராட்ட இயக்கங்கள் பதிவுசெய்யப்பட்ட பின்பு முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 32வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம்தான் உறுப்புரிமையை வைத்திருந்தது.
ஆனால் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு தெரியாத குழந்தைகள், 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியத்திற்குள் வந்தவர்கள் ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பி விடயத்தில் டெலோவும் ஒரு கட்சியென்று மக்கள் நினைப்பதற்காக அக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு(டெலோ) நீண்ட வரலாறு இருக்கின்றது. 50ஆம் ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ஆம் ஆண்டில் கொண்டாடிவிட்டோம். 52ஆவது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் டெலோவும் நாங்கள் இருக்கின்றோம் என்று காட்டுவதற்காக கடிதம் அனுப்பியதாக கூறுவது சிறுபிள்ளைத்தனமாகும்.
இவர்கள் கட்சியிலே நீண்டகாலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவமடைய வேண்டும்,அதற்குப் பின்பு இந்த வரலாறுகளை சரியாகப் படிக்க வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் கடந்த 39வருடங்களாக இந்தப் போராட்டம், அரசியல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் வரலாற்றுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்தகால வரலாறுகளை யாரும் சொல்லித்தரணே;டிய தேவையில்லை. இவர்கள் முதலில் புத்தகத்தை படிக்க வேண்டும் அல்லது யாராவது இந்த வரலாறுகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். வரலாறு நன்கு தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனையவர்களை நான் குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்கு அதனை படிப்பதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை.
இந்த ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பல முகங்களை வைத்திருக்கின்றனர். தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விருப்பமான முகத்தை காட்டிக் கொள்கின்றனர். அந்த வகையிலே ஐக்கிய நாடுகள் சபையில் சென்று உரையாற்றும்போது ஏதோ தான் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவிருக்கின்றேன், நீங்கள் என்னுடன் பேசுவதற்கு இலங்கைக்கு வாருங்கள் என்று அழைத்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்சவின் கடந்தகால ஆட்சியிலே பல புலம் பெயர் அமைப்புகளும் புலம் பெயர்ந்தவர்களும் தடையுத்தரவு விதிக்கப்பட்டனர். 2015ஆம் ஆண்டில் மைத்திரி, ரணில் ஆட்சியிலே அந்தத் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சியிலே மீண்டும் அந்த அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் தடையுத்தரவை போட்டுவிட்டு தற்போது இலங்கைக்கு வாருங்கள்,என்னுடன் பேசுங்கள் என அழைப்பது வேடிக்கையான விடயமாகும்.
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கின்றேன் என்கின்றார். காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் நிங்கள் கொடுக்கலாம். ஆனால் உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே?தங்களது மனைவிமார்,பெற்றோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான முன்னணிப் போராளிகள் முக்கியமாக ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமான ஈரோசின் தலைவராக இருந்த பாலகுமார், அவரது மகன் போன்றோர் உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களை கொன்றுவிட்டீர்கள். நீங்கள் கொலைக் குற்றவாளிகள். நீங்கள் தண்டனை பெறவேண்டியவர்கள். நீங்கள் அப்பட்டமான கொலைகளை செய்துவிட்டு அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கின்றீர்கள். இதனை நீங்களே ஏற்றுக்கொள்கின்றீர்கள். அந்த வகையில்தான் தமிழீழ விடுதலை இயக்கம் இந்த மரணச்சான்றிதழ் விடயத்தை பார்க்கின்றது.
அதற்கும் மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு நீங்கள் முயற்சிக்கின்றீர்கள், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் உங்களுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை அடுத்த சித்திரை மாதத்திலிருந்து நிறுத்த இருக்கின்றது. அதற்கிடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு நாளை வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்தக் குழுவை நாளை மறுதினம் சந்திக்கவிருக்கின்றது. நாங்கள் கேட்கவிருப்பது பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் அல்லது அதில் திருத்தத்தை கொண்டுவரவேண்டும் என்பதல்ல.முற்றுமுழுதாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதாகும். இதுவே தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடாகும்.