உதயகம்பன்வில எனும் அமைச்சருக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்திருப்பது வேதனையை தருகிறது. இதன் மூலம் நேரத்தை நாம் வீணடிக்கிறோம். உதயகம்பன்வில ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி திறமையுள்ள நல்ல மனிதர். அதையும் தாண்டி அவர் நாட்டுப்பற்றுள்ள அமைச்சர். இந்த நாட்டில் வாழுகின்றவர்கள் நாட்டுப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோமோ அந்த அடிப்படியிலான தேசப்பற்றுள்ள அமைச்சர் அவர். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதன் மூலம் நீங்கள் வெற்றியடைய போவதில்லை. எதற்காக அரச பணத்தையும், எம்.பிக்களின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என்று கேட்கிறேன். பொதுவாக எந்த அரசாக இருந்தாலும் குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பதுவும் மக்களுக்கு நல்லதாகவே அமைந்ததுமான அரசாங்கத்தையே நாங்கள் தொடர்ந்தும் வழங்கி வந்திருக்கிறோம் என தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்றை (20) பாராளுமன்ற உரையின் போது தெரிவித்தார்.
அமைச்சர் உதயகம்பன்விலவுக்கு எதிரான பிரேரணையில் கலந்துகொண்டு மேலும் பேசிய அவர் தனதுரையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மக்களுக்காக அன்றி வீணாக நேரத்தை செலவழிப்பது கவலையை தருகிறது. பயனான விடயங்களில் நேரத்தை பயன்படுத்தினால் அது நன்மையாக இருக்கும். நல்ல நிலம், நீர், போன்ற வளங்கள் உள்ள எமது நாட்டில் எமது மக்களினதும், விவசாயிகளினதும் பொருளாதாரத்தை மேம்படுத்த எவ்வகையான திட்டங்களை வகுக்கலாம் என்பதில் எமது நேரத்தை செலவளித்திருக்கலாம். அது மக்களுக்கு நலவாக இருக்கும். கடந்த காலங்களில் ஆங்கிலேயர், போத்துக்கீசர், சோழ பாண்டியர்கள் என பலரும் இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடித்தவற்றை எண்ணி பாருங்கள்.
இந்த நாட்டில் நிறைய வளங்கள் உள்ளது. நான்கு இனங்கள் இரண்டு பிரதான மொழிகள் பேசும் இந்த நாட்டி ன் சொத்துக்களை சூறையாட யுத்தம் என்ற பேரில் நாங்கள் இழந்தவற்றை பற்றி பேசினாலும் நன்மை பயக்கும். இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் சமாதானமாக வாழ முடியாமல் வெளிநாட்டு சக்திகள் எமது அரசியலுக்குள் பின்னிப்பிணைந்து எமது வளங்களை சூறையாட எடுக்கும் முயற்சிகளை பற்றி நாம் பேசாமல் இருக்கிறோம். எமக்குள் நாமே பேசி எமது பிரச்சினைகளுக்கான தீர்வை பெறுவது பற்றி பேச இங்கு யாரும் இல்லை.
ஏற்றுமதியும், இறக்குமதியும் தடைப்பட்டுள்ள இந்த கொரோனா காலத்தில் ஒன்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றில் எண்ணெய் விலை அதிகரிப்பது இதுதான் முதற்தடவை என்றால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டும். அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல கடந்த ஐக்கிய தேசிய அரசாக இருந்தாலும் சரி ஏனைய அரசாங்கங்களிலும் சரி எண்ணெய் விலை கூடுவதும், குறைவதும் வழமை. இங்கு எண்ணெய் விலையல்ல பிரச்சினை. பொருளாதார பிரச்சினை. அரச ஊழியர்கள் மாதாந்த சம்பள உயர்வை பற்றி சிந்திக்கிறார்கள். பொதுமக்கள் நாளாந்த வருமானம் கூட வேண்டும் என்றும், பொருட்களின் விலை குறைய வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள்.
பொதுவில் நாம் சிந்திக்கின்ற போது எமது நாட்டுக்கு சிறந்த பொருளாதார கொள்கையை நாம் கொண்டு வர வேண்டும். நிதியமைச்சரை முன்னிறுத்தி சிறந்த பொருளாதார கொள்கையை உருவாக்குவோம் என்று எதிரணி தரப்பினர் அதற்கான முன்னறிவிப்பை தரலாம். பொருளாதார கொள்கை என்பது கிடைக்கும் வருமானத்தில் செலவினங்களை செய்வது. சாத்தியபாடற்ற விடயங்களுக்கு வீணாக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எதிராணியினரை கேட்டுக்கொள்கிறேன். என்றார்.