இக்கட்டான இக்காலகட்டத்திலே சுகாதார மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் இந்த நாட்டிலே இருக்கின்ற அனைத்து மக்களின் வாழ்வையும் பாதுகாப்பதற்காகச் செயற்பட வேண்டும் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
அண்மையில் பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவர் கொரோணா தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டமைக்கமைவாக அவருடன் தொடர்பினை வைத்திருந்தமையால் சந்தேகத்தின் பேரில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்று தொற்று இல்லை என வைத்திய சான்றிதழ் பெற்ற நிலையில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவில் இருந்து வந்த எனது நண்பர் கொரோணா தொற்றுக்குள்ளானவர் என்ற அடிப்படையில் அவருடன் நான் பழகியதன் காரணமாக கடந்த மார்ச் 15ம் திகதியில் இருந்து என்னை நான் சுய தனிமைப்படுத்தியிருந்தேன். அந்த அடிப்படையில் அவர் சென்று சந்தித்தவர்கள் என்ற ரீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் திணைக்களத்தினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
எங்களது தனிமைப்படுத்தல் காலம் கடந்த மார்ச் 29 உடன் முடிவுற்றது. அதன்படி எங்களில் யாருக்கும் அந்த நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். அந்த அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இருந்து அதற்கான சான்றிதழும் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கால கட்டங்களிலே எங்களுக்காக கடமையாற்றிய பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது முதல் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அதேவேளையில் இக்காலப் பகுதியில் எமக்காகப் பிரார்த்தனை செய்தவர்கள், தொலைபேசிகளில் எமக்கு ஆறுதல் கூறியவர்கள், எமக்குப் பல்வேறு வகைகளில் உதவிகள் செய்தவர்கள் உட்பட எமது உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
மிகவும் துன்பியலான இந்தக் காலகட்டத்தில் ஏனைய மனிதர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தங்களைத் தியாகம் செய்து சிறந்த சேiயினை ஆற்றிக் கொண்டு வருகின்ற வைத்தியர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஏனைய அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் அனைவரும் பாராட்டப்பட வேண்டிய அதேவேளையில் இறைவன் அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல வாழ்வினைத் தரவேண்டும் எனவும பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறான துன்பியலான வேளையில் ஒரு சில மனிதத்தன்மையற்றவர்கள் தங்களுடைய சுய அரசியல் இலாபம் கருதி என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் பொதுமக்களிடம் வீணான வதந்திகளைப் பரப்பி, பொதுமக்களைப் பீதியுறச் செய்து, பிழையான பல கருத்துக்களைப் பொதுமக்கள் மத்தியில் விதைப்பதற்கு முற்பட்டமையையும் நாங்கள் அவதானித்தோம். ஒரு மனிதனுடைய துயரத்திலே இன்னுமொரு மனிதன் சுகம் காண முடியுமாக இருந்தால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களின் பொய் முகங்களை எமது மக்கள் இக்கால கட்டத்தில் உணர்ந்திருப்பார்கள்.
இந்த நிலை எமது நாட்டுக்கு மட்டுமல்லாது மழு உலகுக்குமே அச்சுறுத்தலாக இருக்கின்ற இந்த வேளையிலே நாங்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிணைந்து மக்களின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த நிலைமை முற்றாக நீங்கி மக்களின் வாழ்வு வழம்பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதுடன், இந்தக் காலகட்டத்திலே சுகாதார மற்றும் பாதுக்காப்பு அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி நாங்கள் எம்மை மாத்திரமல்லாது எமது சமூகத்தையும் இந்த நாட்டிலே இருக்கின்ற அனைத்து மக்களின் வாழ்வையும் பாதுகாப்பதற்காகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்