கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியா முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும். முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டமையே சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன எனக் கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள வவுணதீவுக் குற்றச் செயல்களோடு சம்மந்தப்படாத முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடுகளைக் கொடுக்கவும் பாதுகாப்புத் தரப்பு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
21ம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் தொடர்புடையோர் வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலையுடனும் தொடர்பு பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பை மாத்திரம் அல்லாமல், முழு நாட்டையும் அதிரவைத்த பங்கரவாதச் செயல்கள் மூலமான மனித அவலம் அரங்கேற்றப்பட்டு ஒருவாரம் கடந்து விட்டது. அந்தவகையில், நாட்டில் எட்டு இடங்களில் நடைபெற்ற மனித குண்டுதாரிகளின் கொடூர செயல் மூலமாக 350க்கு மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன அதேபோன்று 450க்கும் அதிகமான அப்பாவிகள் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் சுற்றிவலைப்புகள், கைதுகள் மும்முறமாகச் செய்யப்பட்டு வருகின்றன. 100க்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மனித குண்டுகளும் வெடித்துள்ளன.
எது எப்படியாக இருந்தாலும், இந்த பயங்கரவதத்தின் ஆரம்பம் கடந்த 21ம் திகதியாக இருக்கவில்லை. அது ஏறத்தாழ 05 மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்றே கூற வேண்டும். அதாவது, 30.11.2018 அதிகாலை வவுணதீவுப் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டதோடு அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. இதற்கு அடுத்து சந்தேக நபர்களாக முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் தலா 05 பிள்ளைகளின் தந்தையர்களாவர், ஒருவர் மட்டக்களப்பு கரையாக்கன்தீவைச் சேர்ந்தவர், அடுத்தவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இவர்களது கைதோடு விசாரணைகள் ஏறத்தாழ முடிந்து விட்டது போன்று அமைந்திருந்தது. யாரோ குற்றத்தைச் செய்துவிட்டு இவ்விருவரது தலைகளில் குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பது போன்று என்னிடம் நியாயமான சந்தேகங்கள் இருந்தன. இது தொடர்பாகப் பாராளுமன்றத்திலும் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். அதே போன்று கடந்த காலத்தில் மண்டூரில் வைத்து மதிதயன் என்ற சொல்லப்படுகின்ற சமூக சேவை உத்தியோகத்தர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலையாளி சம்மந்தமான குற்றவாளிகளும் இதுவரை கண்டுபடிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.
அதாவது சூத்திரதாரிகள் யாரோ இருக்க சம்மந்தம் இல்லாதவர்கள், சம்மந்தம் இல்லாதவிதத்தில் சந்தேகத்தின் போரில் கைதுகள் செய்ய்பட்டுள்ளனர். அத்துடன் கோவைகளும் மூடப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது உறங்கிய உண்மையொன்று வெளியில் வந்திருக்கின்றது. அதாவது, குற்றச் செயல்களின் முக்கியமான சூத்திரதாரியான சஹ்ரானின் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாக்குமூலத்தின்படி வவுணதீவுக் கொலைச் சம்பவத்தில் அவர் சம்மந்தப்பட்டிருப்பதாக ஒத்துக் கொண்டிருக்கின்றார். ஆயின், உண்மையான குற்றவாளி இப்போதுதான் இனங்காணப்பட்டுள்ளார். அதேவேளை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு தற்போதும் விசாரிக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
அதாவது, யாரோ குற்றங்களைச் செய்ய யாரோ கைது செய்யப்படுகின்ற நிலைமை எமது நாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இதனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும், அக்குற்றவாளிகள் மேலும் மேலும் கொடூரமான செயல்களைச் செய்வதற்கும் இடமளிக்கப்படுகின்றன.
குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கின்ற சட்டவியல் சார்ந்த கருத்தொன்று இருக்கின்றது. அவ்வாறு இருக்க ஏறத்தாழ 05 மாதங்களாகிய பின்னர் தான் உண்மையான குற்றவாளியை இனங்கண்டிருக்கிறார்கள். எனவே முறையான துப்புத் துலக்கல்கள் புலனாய்வுகள் நடைபெற்றிருந்தால் 05 மாத காலத்திற்குள் பல சந்தேகநபர்களை அடையாளம் கண்டு அண்மையில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தைத் தடுத்திருக்கலாம். அதேவேளை, நிரபராதிகள் வீணாக தண்டிக்கப்படுவதையும் தவிர்த்திருக்கலாம்.
துப்புகள் துலக்கப்படுவதில் குறைபாடுகள் இருக்கின்றனவா? துலக்கப்பட்ட துப்புகளை உரியவர்களுக்கு அறிவிப்பதில் குறைபாடு:கள் இருக்கின்றனவா? அறிவிக்கப்பட்ட போதும் உரியவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதில் குறைபாடுகள் இருக்கின்றனவா? அல்லது புலனாய்வுப் பகுதிகளில் யாராவது ஊடுருவி இருக்கின்றார்களா? அந்த ஊடுருவல்கள் புலனாய்வுப் பகுதியை பலவீனமாக்கியிருக்கின்றதா? அதிகார சக்திகள் சிலர் இந்த பயங்கரவாத அமைப்புகளோடு ஏதாவது பின்னணியில் இருக்கின்றார்களா? அதேவேளை இந்தப் பயங்கரவாத சூத்திரதாரிகள் வாழ்ந்த இடங்களில் காணப்பட்ட புலனாய்வாளர்கள் உரிய புலனாய்வுகளை செய்யவில்லையா? புலனாய்வுகள் செய்யப்பட்டும் அவை மறைக்கப்பட்டுள்ளனவா? ஆயின் அப்பிரதேசங்களில் இருந்த புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அப்பிரதேசங்களில் பணியாற்றப் போகின்றார்களா? என்கின்ற பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்துள்ளன.
அதேவேளை அரசின் தலைவர், பாதுகாப்புப் படையின் தலைவர் என்ற வகையில் செயற்படுகின்ற ஜனாதிபதி அவர்கள் போதைவஸ்தினைக் கட்டுப்படுத்துவதில் எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாக சர்வதேச பயங்கரவாதம் நாட்டிற்குள் புகுந்து அவலத்தை ஏற்படுத்தப் போவதைக் கவனிப்பதில் கவனம் செலுத்தவில்லையா? அதேநேரம் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகிய இரு பாரிய விடயதானங்களை சுமந்து கொண்டு ஏனைய அமைச்சுகளையும் சுமப்பதில் சிரமப்படுகின்றாரா? சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொருத்தமான ஒருவரிடம் ஒப்படைக்காமல் இருந்தததால் இப்படியான தவறுகள் ஏற்பட்டனவா? இரு முக்கியமான அமைச்சசுகளையும் ஜனாதிபதியே வைத்திருக்க வேண்டும் என்பதில் யார் அழுத்தம் கொடுத்தார்கள்? இதனால் சட்டம் ஒழுங்கு அமைச்சு வினைத்திறன் அற்றுப் போயுள்ளதா போன்ற கேள்விகளும் இயல்பாகவே எம்மத்தியில் எழுகின்றன.
எனவே அரசியல் நோக்கம், அரசியல் தேவை, அரசியல் இலாபம் என்பவற்றுக்காக முக்கியமான அமைச்சுகளை பொருத்தமானவர்களிடம் கொடுக்காமல் இருப்பதால் இப்படியான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாமா என்றெல்லாம் பல கோணங்களில் மக்களும் நாமும சிந்திக்கின்றோம். எனவே நியாயமான சந்தேகங்கள் நியாயமான கேள்விகளுக்கு உரியவர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். பாதுகாப்புச் சபைக்கான கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படுவதில்லை, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அழைக்கப்படுவதில்லை, பாதுகாப்பச் சபை பிரதமரின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. என்றெல்லாம் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் பேசுகின்றனர்.
ஜனாதிபதி அவரைச் சார்ந்தவர்கள், பிரதமர் அவரைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமுள்ள தன்முனைப்புச் சிந்தனைகள் அரசியல் தேவைக்காக இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த இடைவெளிகளை பயங்கரவாதிகள் அவர்கள் பாணியில் சரியாப் பயன்படுத்தியுள்ளனர் போன்று தெரிகின்றது. ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் அவர்களது அரசியற் கட்சி ரீதியான தேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த முரண்பாடுகள் குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளன.
கட்சி நலன் என்பதை விட நாட்டு நலன், மக்கள் நலன் என்பதுதான் முக்கியமான விடயங்களாகும். இதனை இனிமேலாவது ஐக்கிய தேசியக் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், பொதுஜனப் பெரமுன கட்சியினர் உட்பட இன்னும் பல கட்சியினர் உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளனர்.
நியுசிலாந்தில் தனிநபர் ஒருவர் மூன்று துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இஸ்லாமியரின் பள்ளிவாசல்களில் தாக்குதல்களை நடாத்தியது மனிதநேயத்திற்கு முரணானது என்பதை மனிதாபிமானிகள் உணர்கின்றனர். ஆனால், அதற்கான பதிலடியொன்று எங்கோ நிகழும் என்கிற எதிர்பார்ப்பு பகுப்பாய்வாளர்கள் மத்தியில் இருந்தன. ஆனால் மேற்குலக நாடுகள் அதனை உணர்ந்து தமது பாதுகாப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றன. பாதுகாப்புப் பலவீனம் அல்லது பாதுகாப்பு ஓட்டைகள் எங்கிருக்கின்றது என்பதை பயங்கரவாதிகள் கூர்மையாக அவதானித்து வந்திருக்கின்றனர். அதன் விளைவுதான் இலங்கையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றது.
இந்தியா புலனாய்வுத் தகவல்களைப் பரிமாரியதோடு இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற இருக்கின்றது என்பதை எச்சரித்திருந்தும் ஏன் நமது தலைவர்கள் பாதுகாப்புத் துறையினர் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு குடிமகன் மத்தியிலும் எழுகின்றது. இன்மேலாவது இலங்கை தலைவர்கள், அதிகாரிகள் புலனாய்வுத் தகவல்களை சரியாக, முறையாகக் கையாள வேண்டும். குற்றவாளிகள் இருக்க குற்றவாளிகளைக் கண்டுகொள்ளாமல் அப்பாவிகளைக் கைது செய்து அவர்களைக் கொடுமைப் படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள வவுணதீவுக் குற்றச் செயல்களோடு சம்மந்தப்படாத முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடுகளைக் கொடுக்கவும் முன்வர வேண்டும். அதேபோன்று கொடூரமான செயல்களைச் செய்தவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளை எந்த சமூகத்திலும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது. ஆனால் மறைமுகமாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற அதிகார சக்திகள் கண்டறியப்பட வேண்டும். அவர்களுக்கான அதிகாரப் பலம் நீக்கப்பட வேண்டும். அதிகார பலத்தோடு இருக்கின்றவர்கள் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு வழிசமைக்கக் கூடாது என்று தெரிவித்தார்.