மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்ற படைப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை நடத்தியதுடன், விசாரிப்பிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்த சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் இருவர், கடந்த வௌ்ளிக்கிழமை (30) குத்தியும், வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களது ஆயுதங்கள் இரண்டும் அபகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.
அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியான விசாரணைகளில் ஒன்றாகவே இன்றைய (03) தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், அதற்கு முந்திய காலத்தில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களின் வீடுகளுக்கு, விசேட அதிரடிப்படையினர் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது புலனாய்வுப் பிரிவினரும் உடனிருந்துள்ளனர்.
முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ள பெயர்களைக் கொண்டவர்கள், வீட்டிலிருக்கின்றார்களா அவ்வாறில்லையெனில் அவர்கள் தற்போது வதியும் அல்லது தொழில் புரியும் இடங்களின் சரியான விவரங்களையும் தருமாறு வீட்டிலிருப்போரிடம் அதிரடிப்படையினர் விவரங்களைத் திரட்டினர் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனினும், இந்தத் தேடுதலும் விசாரிப்பு நடவடிக்கைகளும் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் ஏதுமில்லாத வகையில், சுமுகமாகவே இடம்பெற்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.