மட்டக்களப்பு வாழைச்சேனையில் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் ஒருவரை இடமாற்றம் செய்யக்கோரி பிரதேச மக்கள் சிலர் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன் கிழமை (1.8.2018) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது குறித்த சமூர்த்தி உத்தியோகஸ்த்தருக்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களையும் எழுப்பினார்கள்.
குறித்த சம்பவத்தினை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
ஒரு சில சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் ஏழை மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளாகிய எங்களுக்கும் கணக்காய்வாளர்களுக்கும் தெரியப்படுத்துகின்றார்கள்.
அவர்களை பாராட்ட வேண்டுமா.. இல்லையா..என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறவர்களை பாராட்ட வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்கள் இதன்போது பதில் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கலந்துரையாடிய போது தெரிவி;த்ததாவது.
அவர்கள் தெரியப்படுத்துகின்ற காரணத்தால் ஊழல்களை எங்களால் கண்டுபிடிக்க முடிகிறது. நியாத்தினை மேற்கொள்ளும்போது அதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.பொதுமக்கள் களவிற்கு துணை போனால் எம்மால் எதுவும் செய்யமுடியாது. களவு இடம்பெறாமல் அரச உதவிகள் அனைத்தும் மக்களாகிய உங்களுக்கு கிடைக்க வேண்டும். சமூர்த்தி தருகிறேன் வாருங்கள் என்று கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார்கள்.
உத்தியோகஸ்த்தர்களாகிய உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது.எந்த வகையில் வெளிநாட்டிற்கு சென்ற மக்களின் பணத்தினை எடுப்பீர்கள். அப்படியானவர்களை விசாரித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரதேசத்தின் அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உப்பினருமாகிய நான் கூறுகின்றேன் ஏழை மக்களின் பணத்தினை யாரும் எடுக்க விடமாட்டேன். அரச ஊழல் செய்தால் விசாரணைகள் மற்றும் இடமாற்றங்களும் வரும். ஏழைகளின் சமூர்த்தி பணத்தில் எவர் கை வைத்தாலும் விடமாட்டேன். ஏழைகளின் பெயர்களை போட்டு அதிகாரிகள் பணத்தினை எடுக்கமுடியாது. அவ்வாறனவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
சிலருக்கு இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளது. சமுர்த்தியில் வெளிநாட்டிற்கு போனவர்களின் பெயர்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேவேளை அதனை கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடிக்க முற்படுகையில் ஆதாரங்கள் கோவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இவை தொடர்பான விடயங்களுக்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
எனவே குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் (காளிராஜா)ஒருவர்தான் மேற்படி பணம் எடுக்கப்படும் விடயங்களை தெரியப்படுத்தியுள்ளார்.
அவரை நான் அழைத்து பேசிய போது சமுர்த்தி தொடர்பான மேற்படி உண்மைகளை என்னிடம் தெளிவாக கூறினார். தற்போது அவரை மாற்றும்படி கூறுகிறீர்கள். குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் களவு எடுத்திருந்தால் பொதுமக்களிடம் லஞ்சம் பெற்றிருந்தால் அது தொடர்பான ஆதாரங்களை என்னிடம் தாருங்கள். அவரக்கெதிரான நடவடிக்கை நான் எடுப்பேன். அவரை சும்மா மாற்றி எதுவித பிரயோசனமும் இல்லை. குறித்த உத்தியோகஸ்த்தர்தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று களவுகளை வெளியில் கொண்டு வந்துள்ளார்.
இதனால் அனேக களவுகள் பிடிபடுகிறது. வரிசையில் களவு வரப்போகிறது. அதுதான் சம்பந்தப்பட்ட உத்தியோகஸ்த்தர்கள் பயப்படுகின்றார்கள்.
பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முன் நிற்கவேண்டிய தேவையில்லை. நான் வந்து இது விடயம் தொடர்பாக பேசுவதற்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடயம் அறிந்து கலைந்து சென்று விட்டனர்.
வீடு மற்றும் சமூர்த்தி வழங்குதல் தொடர்பாக யாராவது லஞ்சம் கேட்டால் எனக்கு அறிவிக்க வேண்டும். ஒருவரும் லஞ்சம் பெற இயலாது. அரச அதிகாரிகளுக்கு உத்தியோகம் வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சேவையாற்றவே. அகவே லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றமாகும் என்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் விடயங்களை தெளிவுபடுத்தினார்.
இதனனை விளங்கிகொண்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.இதே வேளை சில பயனாளிகள் தங்களுக்கு என சமூர்த்தி வங்கி வாழைச்சேனையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக இதன்போது பாராளுமற்ற உறுப்பினரிடம் முறையிடடமை குறிப்பிடத்தக்கது.