ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய விஜயகலா மஹேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி, சிங்கள ராவய அமைப்பு இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளது.
அத்துடன், அவருக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான காவற்துறை விசாரணைப் பிரிவிலும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர்கள் காவற்துறை தலைமையகத்துக்கு செல்லவுள்ளனர்.
அந்த அமைப்பின் பொதுசெயலாளர் மகல்கந்தே சுதந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்குவதே தமது முக்கிய இலக்கு என்று விஜயகலா மஹேஸ்வரன் கூறி இருந்தார்.
இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமது ராஜாங்க அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நேற்று அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்கி இருந்தார்.
அதேநேரம், இதுதொடர்பில் விஜயகலா மஹேஸ்வரன் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில், வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே தாம் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.