‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள பகிரங்க தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விளக்கவுரையாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம் அவசியம் என்ற விஜயகலா மகேஸ்வரனின் கூற்றை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.தே.கட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புவாய்ந்த கட்சி என்றவகையில் கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்கும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு கட்சியின் உறுப்பினர் தொகையை அதிகரிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியிருக்கும் ஆவா குழுவினரின் செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் முழுமையாக ஒழிப்பதற்காக வட மாகாணத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ரொஸான் பெர்ணாந்து தலைமையில் 100 பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.