வித்யாவுக்கு ஒன்றிணைந்து குரல்கொடுத்தது போல இசாலினிக்கும் பாகுபாடின்றி குரல்கொடுத்து நீதியை பெற வேண்டும் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

கடந்த 2021.07.15 ம் திகதி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ரிசாட் பதியுதீனின்  வீட்டில் வைத்து மர்மமான முறையில் மரணமான டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி இசாலினியின் மரணத்திற்கான நீதி கிடைக்க வேண்டும் எனும் அடிப்படையில் நானும் ஒரு சமூக செயற்பாட்டாளன் எனும் அடிப்படையில் இவ்முறைப்பாட்டை கையளித்தேன் என கல்முனை பிராந்திய சமூக செயற்பாட்டாளரான தாமோதரன் பிரதீபன் தெரிவித்தார்.
 
கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு கிளையில் முறைப்பாடொன்றை  இன்று பகல் பதிவு செய்த பின்னர் இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த சிறுமியை சிறுவர் உரிமையை மீறி வேலைக்கமர்த்திய குற்றம் தொடர்பிலும் இந்த சிறுமி நாட்களாக பாலியல் ரீதியாகவும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என வெளியாகும் செய்திகளின் பிரகாரம் அது தொடர்பிலும் சிறுமி தீயில் எரிந்து மரணமாகியுள்ளமை தொடர்பிலும் பக்கச் சார்புகளற்ற வகையில் நீதியான விசாரணைகள் செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சிறுமியின் இழப்பிற்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் சிறுவர் உரிமைகளும் மனித உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் கூறி தனது முறைப்பாட்டினை கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் வடக்கில் மாணவி வித்யா கொலை வழக்கில் எவ்வாறு பிரதேச, இன, மத பாகுபாடுகளின்றி சகலரும் ஒன்றிணைந்து குரல்கொடுத்தார்களோ அதே போன்று இவ்விடயத்திலும் சகலரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் மலையக மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிலும் அரசியல்வாதிகளும், சமூக அமைப்புக்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related posts