நல்லதோ கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார். இந்த நன்நாளில் அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் நிலைக்கப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு கிழக்கிலங்கையின் பிரபல இந்துசமயகுருவான காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள்கூறினார்.
வேழமுகத்து விநாயகன் பிறந்த நாளான நேற்று(10) விநாயகசதுர்த்தி நாளாகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி தினத்தில் விநாயகப்பெருமான பிறந்தார்.
நேற்றைய விநாயகசதுர்த்தி விசேட நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்:
விநாயகரை மஞ்சளில் பிடித்து அருகம் புல் எருக்கு நீர் வாழை பழம் இவை மட்டும் போதுமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிமையான விநாயகர் வழிபாட்டை கபிலர் நமக்கு வழங்கி விட்டார்.
இன்று விநாயகர் சதுர்த்தியாகும்.
புதிய மண்ணினால் ஆன விநாயகரை வாங்கி வீட்டில் வைத்து வணங்கி பின்னர் நீர்நிலைகளில் விடலாம். விநாயகரை வீட்டிற்கு கொண்டு வரும் முன்னரே வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலையை கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை வைத்து வணங்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை பூஜைகள்செய்து வணங்கவேண்டும்.
விநாயகருக்கு உகந்த மலர்கள் பழங்கள் பலகாரங்கள் படைத்து வணங்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் எதிர்மறையான எண்ணங்கள் விலகி குடும்பம் மகிழ்ச்சியாகவும் மனநிம்மதியுடனும் இருக்கும்.
விநாயகருக்கு பிரியமான 21 எனும் இலக்கம்
பொதுவாக கணபதிக்குப் படைக்கப்படும் மலர் பத்திரம் (இலை) நைவேத்தியம் பழம் என அனைத்திலும் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என கூறுவதுண்டு.
அதன் பொருள் என்னவென்றால் ஞானேந்திரியங்கள் – 5
கர்மேந்திரியங்கள் – 5 அவற்றின் காரியங்கள் – 10
மனம்1மொத்தம் 21.
விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
பூஜிக்க உகந்த 21 மலர்கள்
———————————
புன்னை மந்தாரை மகிழம் பாதிரி தும்பை அரளி ஊமத்தை சம்பங்கி மாம்பூ தாழம்பூ முல்லை கொன்றை எருக்கு செங்கழுநீர் செவ்வரளி வில்வம் குருந்தை பவளமல்லி ஜாதிமல்லி மாதுளம் கண்டங்கத்திரி.
அபிஷேகப் பொருட்கள் 21
———————————
தண்ணீர் எண்ணெய் சீயக்காய் சந்தனாதித்தைலம் மாப்பொடி மஞ்சட்பொடி திரவியப்பொடி பஞ்சகவ்யம் ரஸப்பஞ்சாமிர்தம் பழப்பஞ்சாமிர்தம் நெய் பால் தயிர் தேன் கருப்பஞ்சாறு பழரகங்கள் இளநீர் சந்தனம்திருநீறு குங்குமம் பன்னீர்.
21 இலைகள் (பத்ரம்)
—————————
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது அனைவருக்கும் தெரியும்.
மாசீ பத்ரம் ப்ருஹதி பத்ரம் வில்வ பத்ரம் தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம் துத்தூர பத்ரம் பதரீ பத்ரம் அபாமார்க பத்ரம் துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம் கரவீர பத்ரம் விஷ்ணுகிராந்தி பத்ரம் தாடிமீ (மாதுளை) பத்ரம் தேவதாரு பத்ரம் மருவ பத்ரம் சிந்துவார பத்ரம் ஜாஜீ பத்ரம் கண்டகீ பத்ரம் சமீ (வன்னி) பத்ரம் அஸ்வபத்ரம் அர்ஜுன பத்ரம் அர்க (எருக்கு) பத்ரம்.
எளிய வடிவில் மாசி பருஹதி எனும் கிளா இலை வில்வம் அருக்கு ஊமத்தை இலந்தை நாயுருவி துளசி மாவிலை தங்க அரளி விஷ்ணு கிரந்தி மாதுளை மருவு நொச்சி ஜாதிக்காய் இலை நாரிசங்கை வன்னி அரசு நுணா எருக்கு தேவதாரு.
நிவேதனப் பொருட்கள் 21
மோதகம் அப்பம் அவல் பொரிகடலை கரும்பு சுண்டல் சுகியன் பிட்டு தேன் தினை மாவு பால் பாகு கற்கண்டு சர்க்கரைப் பொங்கல் பாயாசம் முக்கனிகள் விளாம்பழம் நாவற்பழம் எள்ளுருண்டை வடை அதிரசம்.
எளிய வழிபாடு முறை
மேலே குறிப்பிட்ட எதுவும் உங்களால் இயலவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. விநாயகரை மஞ்சளில் பிடித்து அருகம் புல் எருக்கு நீர் வாழை பழம் இவை மட்டும் போதுமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிமையான விநாயகர் வழிபாட்டை கபிலர் நமக்கு வழங்கி விட்டார்.