வெகுஜன ஊடக டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் வெகுஜன ஊடக டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (25) காலை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி அனுசரணையுடன் எழுத்தாணி கலைப் பேரவையால் நடத்தப்பட்ட இந்த டிப்ளோமா கற்கை நெறியின் கற்பித்தல் நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தில் ஊடகக் கற்கைநெறியை நடாத்தி வரும் வொய்ஸ் ஒவ் மீடியா நெட்வோர்க், ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையம் நடத்தியது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களை அதிகமாக கொண்ட 08 பிரதேச செயலகப்பிரிவகளில் உள்ள 30 தமிழ் மொழி மூலமான இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந்த கற்கை நெறியில் 23 பேர் இப்பயிற்சி நெறி நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் , திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் சி. சிறிதரன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார், வொய்ஸ் ஒவ் மீடியா நெட்வோர்க், ஊடகக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் இயக்குனர் அருள் சஞ்சித் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி.மயூரி ஜனன், திருகோணமலை மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான செல்வி.பிரசாந்தினி உதயகுமார் அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் தகுதி அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண மட்ட ஊடகங்களில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts