நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளால் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கட்டிட நிர்மாண நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில், பொலிஸ் மா அதிபரூடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இதன் கட்டுமானப் பணிகள் பிறிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.