கல்முனை மாநகர சபை எல்லையினுள் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் நடைமுறை இம்மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்படவிருப்பதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் இருந்து தரம்பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரமே ஒப்படைக்க வேண்டும் எனவும் தரப்பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர மக்களை அறிவுறுத்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவததற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் எமது திண்மக்கழிவகற்றல் சேவையை வழமைபோல் முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கென இடமொன்று (Dumping Place) எமது மாநகர சபை உட்பட அம்பாறை மாவட்டத்தின் வேறு எப்பகுதியிலும் இல்லாத சூழ்நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியில் மாத்திரமே கடந்த பல வருடங்களாக கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக தற்போது தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரமே பள்ளக்காட்டில் கொட்டுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் அங்கு கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கல்முனை மாநகர பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதில் எமது மாநகர சபை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
ஆகையினால், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை வேறாகவும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத பொருட்களை வேறாகவும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன் இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் இந்நடைமுறை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் எனவும் இதற்கு அனைத்து குடும்பத்தினரும், குறிப்பாக இல்லத்தரசிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
புதிய நடைமுறைக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்களானால், கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறனுடன் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.