கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் வீட்டுக்கு வீடு குழாய் நீர் கிணறு எனும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி குழாய்க்கிணறு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பல இடங்களிலும் அமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகள் உரிய பயனாளிகளிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் குறித்த திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஹ்மத் மன்சூர் இதன்போது தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை அடையாளம் காணப்பட்ட சுமார் 1300 இற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது குடியிருப்புகளில் இவ்வாறு குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன. இதனை இன்னும் விஸ்தரிப்பு செய்து, தேவையுடைய மக்களுக்கு இச்சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நிலைபேறான சேவையை எமது அமைப்பு வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யூ.எம்.ஏ. நிறுவனத்துக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இத்திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும் துரிதமாகவும் உரிய இடங்களுக்கு கொண்டு நடைமுறைப்படுத்துவதில் அர்ப்பணிப்பு, தியாக மனப்பாங்குடன் முன்னின்று செயலாற்றுகின்ற தனது பிரத்தியேக செயலாளரும் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளருமான முஹம்மட் சப்ராஸ் உள்ளிட்ட குழுவினருக்கும் பிரதி முதலவர் ரஹ்மத் மன்சூர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.