வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ் ஆப்” பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “வாட்ஸ் ஆப்” அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு தகவல் வந்தது.
மேலும் தனிப்பட்ட கொள்கைகளை அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், “நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்ஆப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.
பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, பதிவிறக்கம் செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்ஆப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.
எனினும், தனிப்பட்ட அப்டேட் பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் பல்வேறு பயனாளர்களும், சில ஊடகங்களும், மக்களின் உரையாடல்கள் மற்றும் தனிநபர் விவரங்களை அந்நிறுவனம் படிக்க முடியும் என தவறுதலாக புரிந்து கொண்டது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக, வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட புதிய வர்த்தக அம்சங்களை செயல்படுத்தும் முடிவை ஒத்தி வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் தகவல் பரிமாற்றம் பற்றிய விடயங்களுக்கு பயனாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால், வரும் பெப்ரவரி 8ஆம் திகதியில், ஒருவரது வாட்ஸ்ஆப் கணக்கும் தற்காலிக ரத்து செய்யப்படவோ அல்லது நீக்கமோ செய்யப்படாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று வாட்ஸ்ஆப்பில், தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பு எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய தவறான தகவல்களை தெளிவுப்படுத்த போகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.