அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த தகவலை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மேன் முறையீட்டு நீதி மன்றத்தால் இன்று பிற்பகல் மஹிந்தவுக்கு எதிராக வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு காரணமாக, அரசியல் கைதிகள் தொடர்பில் 3 வாரங்களின் பின்னர் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க முடியுமென ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாக, சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது அரசியல் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தீர்வை கண்டதன் பின்னர், அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இது குறித்து கலந்துரையாடப்படுமெனவும் ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக, சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் ஒரு அரசு இல்லை. அமைச்சரவை இல்லை. எனவே அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் ஒன்று அமைக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.