மத்திய மாகாண பாடசாலைகளில் 2437 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. மாகாண அமைச்சின் ஊடாக ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்துக்கொள்வதற்கும் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்குமான சந்தர்ப்பங்கள் சமகாலத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. எனினும் மத்திய அரசாங்கத்தோடு பேச்சுக்களை நடத்தி தீர்வை பெறுவோம்.” என மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்து கலாசார அமைச்சர் எம். ராமேஷ்வரன் தெரிவித்தார்.
ஹட்டன் எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவும், ராகதீஸ்வர கலை நிகழ்வும் பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல பாடசாலைகளுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்துள்ளோம். தலைவர் தொண்டமான் அமைச்சராக இருந்தபொழுது அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பல முறை ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. ஆனால் இன்று ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. நியமனங்களை பெற்றுக்கொள்வதகான சந்தர்ப்பங்கள் சமகாலத்தில் அரிதாகவே காணப்படுகின்றன.
மத்திய மாகாணத்தில் 2437 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இது தொடர்பாக மாகாண முதலமைச்சரின் ஊடாக ஜனாதிபதியின் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் மலையக தோட்டப்புற பாடசாலைகளுக்கு பாரிய நிதிகள் ஒதுக்கப்பட்ட போதிலும் அந்நிதிகள் ஊடாக பாடசாலை அபிவிருத்திக்கென கட்டிடங்கள் அமைக்க காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருக்கின்றது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலத்தில் தோட்டப் புறங்களில் பாடசாலைகளை அமைத்துக்கொள்வதற்கு காணிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. இன்று மலையக மக்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் எல்லா விடயங்களிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே எதிர்வரும் காலங்களில் அரசியலுக்கு அப்பால் சென்று நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்பொழுது தான் எங்கள் சமூகம் முன்னேற்றமடையும்” என்றார்.