கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு இந்த மாதம் 31ம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உயர்தர மாணவர்களின் பாடங்கள் சார்ந்த கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடை செய்யப்படுகின்றன.
மேலும் உயர்தர பாடப்பிரிவுகளது மாதிரி பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் என்பனவும், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விநியோகிக்கப்படுவதும் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் செப்டம்பர் 1ம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதேநேரம், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த மாதம் 5ஆம் திகதி இடம்பெற உள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பான மேலதிக வகுப்புகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் 0112 421 111 என்ற காவல்துறை தலைமையகத்திற்கோ, 119 என்ற காவல்துறை உடனடி அழைப்பு இலக்கங்களுக்கோ அழைத்து தகவல் வழங்க முடியும்.
அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911, 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு முறையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.