போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்,
பொலன்னறுவையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, “மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அச்செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
எவ்வகையான எதிர்ப்புக்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டணையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
தற்போது இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தொிவித்தார்.
இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான அராங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.