மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்துக்கு வான் ஒன்றில் 4.5 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற வான் ஒன்றை நிறுத்துமாறு, சமிஞ்சை காண்பித்தும், சமிஞ்சையை மீறி தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வானை பின்தொடர்ந்து துரத்திச் சென்றபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பகுதியில் வைத்து வழிமறித்து சோதனையிட்ட போது, வானில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 4 அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றியதுடன் 4 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 20 வயது வரையிலானவர்கள் உள்ளடங்குவதாகவும், இவர்கள் காத்தான்குடியைச் சோர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.