1986.02.19 ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினாலும் இராணுவத்தினராலும் மிக கொடூரமான நிலையில் 130 க்கு மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியும் வயல் வெட்டும் கத்தியினாலும் வெட்டிக்கொல்லப்பட்டனர் அதன் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் திருக்கோவில் தங்கவேயுதபுரம் மலைப்பிள்ளையார் ஆலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் அகல்விளக்கேற்றியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அப்பிரதேச மக்கள் இவ்வாறு தமது வாக்குமூலத்தை வழங்கினர்.
அன்று 1986.02.19 ஆம் திகதி காலை 7 மணியளவில் உடும்பன்குளம் சாகாமம் தங்கவேலாலுதபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வயல் அறுவடைக்காக சென்றிருந்தனர் அன்று சுமார் ஒருமணி நேரத்திற்கு பின்னர் சற்றுத்தூரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
அச்சத்தத்தின் பகுதியை நோக்கி நாங்கள் ஓடிச்சென்று பார்த்தபோது இராணுவ உடைகளில் பலர் அங்கு துப்பாக்கிகளுடன் எனது கணவரை துன்புறுத்துவதை கண்டோம் அதில் முஸ்லீம் இனத்தவர்களும் இருந்தனர் பின்னர் நான் அங்கு செல்லமுற்பட்டதும் என்னையும் இன்னும் சில பெண்களையும் துப்பாக்கியை காட்டு அச்சுறுத்தினர் பின் அங்குவந்த இளம் பெண்களை எனது கண் எதிர்க்கவே தயிர் உண்ணக்கொடுத்துவிட்டு கதரக்கதர கர்ப்பழித்தனர்.
அதன்பின்னர் எங்களை சுடுவதாகவும் வெட்டுவதாகவும் என கூற நாங்கள் ஓடி வந்துவிட்டோம் பின்னர் பயத்தில் மறுநாள் தான் போய் பார்த்தோம் அங்கு நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தனர் கொல்லப்பட்டவர்களை இனங்காண்பது கடிணமாக அமைந்திருந்தது அதில் எனது கணவரை நான் இனங்காணவில்லை அவரை பிடித்துச்சென்றதாக கூறினர் நான் தேடாத இடமில்லை இன்றுவரை அவர் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் நடைபெற்று 33 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதற்காக நீதியும் நியாயமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை இதற்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும் என கண்ணீர்மல்கி கருத்துத் தெரிவித்தனர் உடும்பன்குளம் பிரதேச மக்கள்.
இந்நினைந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் மற்றும் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் தங்கவேலாயுதபுரம் மலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் மதிய பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்காக அகல்விளக்கேற்றி நினைவுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.