கிழக்கைப் பொருத்தவரையில் த.தே.கூ, த.ம.வி.பு ஆகியன தங்கள் அடிப்படை வாதத்தைச் சற்று தள்ளி வைக்க வேண்டும்…
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் – க.மோகன்
கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் புதிய புதிய கட்சிகள் தேவையில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு தங்கள் அடிப்படைவாதக் கொள்கைகளைச் சற்றுத் தள்ளி வைத்துச் செயற்பட்டாலே போதும் தமிழர்களின் தனித்துவமான ஆட்சியினை நிறுவக்கூடியதாக இருக்கும். என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட சிறு பின்னடைவை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முடிந்து விட்டது என்று எவரும் கருத்திற்கொள்ள முடியாது. கூட்டமைப்பு பற்றி மக்கள் மத்தியில் சிறு அதிருப்தி நிலைமை உள்ளதே தவிர வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தள்ளிவிட்டு அரசியல் செய்து விட முடியாது. இருக்கின்ற ஆலமரத்தைப் பிடுங்கிவிட்டு அந்த இடத்தில் புதியதொரு மரக்கன்றை நட்டு நிழல் தரும் என்பது எப்போதுமே நடவாத விடயம்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் அடிப்படைவாத விடயத்தில் இருந்து சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கருணா அம்மான் ஆகியோருடன் இணைய முடியும் என்றால் கிழக்கு மாகாணசபையில் ஏன் பிள்ளையானுடன் சேர முடியாது. எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பவற்றின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.
நான் அண்மையில் பிள்ளையானைச் சென்று சந்தித்த போது அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சேர்ந்து செயற்ட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார். இருந்தும் அவர் மஹிந்த எனும் அடிப்படையில் இருந்து வெளியில் வர வேண்டும்.
எது எவ்வாறு இருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளையும் ஒன்றாகச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பொருத்தவரையில் கட்சி அரசியல், சிங்களத் தலைவர்கள் சார்ந்த அரசியல் என்பவற்றை விடுத்து தமிழ் மக்களுக்காக கிழக்குத் தமிழர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறானதொரு எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் மாத்திரமே கிழக்கைத் தமிழர்கள் கையேற்கும் நிலை ஏற்படும்.
தேர்தல்களின் போது கட்டுப் பணத்தை மீளப் பெறும் அளவிற்குக் கூட வாக்குப் பெற முடியாதவர்கள் எல்லாம் இணைந்து ஒரு கூட்டை ஏற்படுத்தி அதனை ஒரு பாரிய கூட்டமைப்பாகக் காட்ட முற்படுகின்ற செயற்பாடு என்றுமே சாத்தியப்படாது. மட்டக்களப்பில் தற்போது புதிய புதிய கட்சிகள் தேவையில்லை. எமது மக்களின் அபிலாசைகளை அதிகம் பெற்ற இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டாலே போதும்.
அதே போன்று ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். எனவே இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு எல்லோரும் இணைந்து ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு யாரேனும் ஒருவருக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.