கொள்கையை முன்வைத்து வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு. ஒரு வரப்பிரசாதமாக அமையும்

ஒரே கொள்கையுடையோர் சேராது போனது, இதுவரை காலமும் கொள்கையை முன்வைத்து வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு. ஒரு வரப்பிரசாதமாக அமையும் என முன்னாள் முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரது நேர்காணல் பின்வருமாறு
கேள்வி:- தற்போதைய நிலையில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- நல்ல கேள்வி. இப்போதிருக்கும் பிரதிநிதிகள் சேர்ந்து இதுவரையில் உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத நிலையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள். ஆனால், நீங்கள் மூன்று கேள்விகளை ஓரே கேள்வியில் உள்ளடக்கியுள்ளீர்கள் போல் தெரிகின்றது.
அவையாவன
1.வருகின்ற தேர்தலில் ஒரே கொள்கையுடைய கணிசமான தமிழ்ப்பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்களா?

  1. அப்படி இல்லை என்றால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களினால் சேர்ந்;து ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா?
  2. அப்படி எடுக்க முடியாவிட்டால் இப்பொழுதிருந்தே நீங்கள் வருகின்ற தேர்தலை எப்;படி முகம் கொடுக்க உத்தேசித்துள்ளீர்கள்?
    இவற்றைப் பரிசீலித்துப் பார்ப்போம்!
    தற்போதைய நிலையில் வருந்தேர்தலில் தமிழ் மக்கட் பிரதிநிதிகளிடையே கொள்கை சார் ஒற்றுமைக்குப் பதில் பிரிந்த மனப்பாங்கே மேலோங்கி நிற்கும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. உண்மையில் நான் வலிந்து ஒரு சாராரை கொள்கை ரீதியாக எம்முடன் சேருமாறு கூறி பணிந்து சென்றமை இவ்வாறான ஒரு நிலைமை வருந் தேர்தலில் ஏற்படக்கூடும் என்பதாலேயே. ஆனால், சுயநலம் வென்று விட்டது. பொது நலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
    ஒரே கொள்கையுடையோர் சேராது போனது, இதுவரை காலமும் கொள்கையை முன்வைத்து வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று கொள்கை மறந்தவர்களுக்கு. ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று அந்தக் கொள்கை மறந்தவர்கள் நினைக்கலாம். ஆனால், எமது மக்கள் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடும். பாராளுமன்றத்திற்கு உள்ளே இதுவரைகாலமும் விடப்படாத கட்சிகளுக்கும் (அவ்வாறு அழைக்கப்படும்) தேசியக் கட்சிகளுக்கும் தமது வாக்குகளைப் பகிர்ந்து கொடுத்து மிக அபாயகரமான ஒரு நிலையை ஏற்படுத்தம் விதத்தில் அவர்கள் சிந்திக்கக்கூடும். குறித்த தேசியக் கட்சிகளும் அவற்றின்பால் சார் கட்சிகளும் தலையெடுத்தால் எமது நிலை தற்போதைய நிலைக்கும் பார்க்க மிகவும் பரிதாபகரமான நிலையை அடையும். வட மாகாணத்தில் தேசியக் கட்சிகளில்; இருந்தும் அவற்றைச் சார்ந்த கட்சிகளில் இருந்துந் தெரிபடப் போகின்றவர்கள் தமிழரே. அந்த வகையில் ஆறுதல் கொள்ள நினைத்தாலும் கிழக்கில் தமிழர் அல்லாதோரே பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பின் வடக்கிலும் கிழக்கிலும் பணம் எடுத்து வேலை கொடுக்கும் படலங்களும் தென்னவர்களின் கூடிய முதலீடுகளும், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரசாங்க திணைக்களங்கள் போன்றவற்றில் கூடிய பெரும்பான்மையினர் உள்ளடக்கங்களும் நடைபெறுவன. அவற்றைத் தேசியக் கட்சிகளும் அவற்றின் சார்ப்புக் கட்சிகளும் தடுக்க முடியாமல் போய்விடும். அவர்கள் வடக்கில் தமிழர்கள் என்றாலும் கிழக்கில் பல் இனத்தவர். அவர்கள் யாவரும் அவர்களின் கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். அடம் பிடித்;தால் பெரும்பான்மையினத் தலைவர்கள் மூலையில் இருத்தி விடுவார்கள்;.
    ஜனாதிபதி சிறிசேன பதவிக்கு வந்தது தமிழ்ப்பேசும் மக்களின் வாக்கினால். இதுவரை அவர் எமது தமிழ் மக்களுக்கான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளாரா? மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளையே அவர் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். அதேபோல் எமது தேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களும் அவை சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு முண்டு கொடுக்கவேயன்றி தமிழர்தம் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த இலாயக்கற்றவர்களாகவே இருப்பர். ஆகவே, தமிழரின் வருங்காலம்சார் கொள்கையில்; ஒருமைத்துவம் கொண்ட மக்கட் பிரதிநிதிகள் கணிசமானவர்கள் இனிவரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்றால் தற்போதைய நிலையில் ஒருவித மயக்க நிலைதான் காணப்படுகின்றது.
    அப்படி தேர்ந்தெடுக்கப்படாமல் பல விதமான வேறு வேறு கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் அவர்கள் உருப்படியாக எதனை செய்ய முடியும் என்பது உங்கள் கேள்விக்குள் இருக்கும் மறு கேள்வி. அவ்வாறு குறிக்கப்படும் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம் மக்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கலாம். ஆனால், எமது வருங்காலம் கவலைக்கிடமாகப் போய்விடும். அதாவது, அரசியல் ரீதியாக எதுவும் எம்மக்களுக்குக்; கொடுக்கப்படமாட்டா. எவ்வாறு குறைபாடுகள் நிறைந்த 13ஆவது திருத்தச் சட்டம் 1992 இல் மேலும் குறைபாடு அடைய மத்திய அரசாங்கத்தால் வழி அமைக்கப்பட்டதோ அதேவாறு மாகாண சபைகளுக்கு இருக்கும் குறைவான உரித்துக்களும் மேலும் மேலும் பறிபோய்விடுவன. மத்தியின் ஆதிக்கம் வலுப்பெறும். தமிழர் தம் வருங்காலம் கவலைக்கிடமாகும்.
    அடுத்தவிடயம் நாங்கள் இப்போதிருந்து இவ்வாறான நிலையைத் தடுக்க என்ன செய்யப்போகின்றோம் என்பது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதாவது தற்போதிருக்கும் அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநித்துவம் கணிசமானது. அதன் தலைவர்களின் பேச்சுக்கள் அண்மைக்காலமாக நாம் இதுகாறும் வலியுறுத்தி வந்தவற்றைப் பிரதிபலிப்பனவாகத் தென்படுகின்றன. உதாரணத்திற்கு அண்மையில் ஒருவர் தமிழர்கள்; வெறும் பொருளாதார நன்மைகள் பெறுவதால் எமது அரசியல் ரீதியான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போய் விடும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அவ்வாறான சிந்தனைகள் வரவேற்கத்தக்கன. அவற்றின் நீட்சியாக தற்போது பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் ஏன் தமது தொகையினரை வைத்து சில பல காரியங்களை இயற்ற முடியாது என்ற கேள்வி எழுகின்றது.
    அண்மையில் பதவியில் உள்ளவர்கள் சார்பில் எமக்கு என்ன வேண்டும் என்று தொலைபேசியில் என்னிடம் கேட்கப்பட்டது. பேசியவர் எனது நண்பர். பதவியில் உள்ளவர் சார்பில் பேசினார். நான் எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஒன்றுந் தேவையில்லை. முடியுமானால் அடுத்த பௌர்ணமி தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள் என்றேன். என்னுடன் கதைத்த இடைத்தரகர் இதுபற்றி உரியவர்களுடன் பேசி பதில் தருவதாகக் கூறினார்.
    இதிலிருந்து பதவியில் உள்ளவர்கள் விரைவில் தமக்கு என்ன நடக்குமோ என்ற பீதியில் உள்ளார்கள் என்று தெரிய வருகின்றது. தற்போதிருக்கும் பாராளுமன்றம் இன்னும் சில மாதங்கள் நீடிக்கப்போகும் நிலையில் எமது மக்களுக்குத் தேவையான பலவற்றை ஏன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சேர்ந்து அரசாங்கத்துடன் பேரம் பேசி பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற கருத்தை முன் வைக்கின்றேன். தற்போதிருக்கும் 16 பேரைக் கொண்டதொரு தமிழர் சார் கட்சியின் அங்கத்தவர்களாக எமது பிரதிநிதிகள் வருங்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட முடியாதென்றால் ஏன் அவர்கள் இப்போதிருந்தே அரசாங்கத்தை நெருக்கி ஒரு சிலவற்றையேனும்; பெற முடியாது என்ற கேள்வி எழுகின்றது. கல்முனையில் தோல்வியடைந்தவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தோல்வியடையும் என்று எதிர்பார்க்காமல் தற்போது சேர்ந்திருக்கும் எம்மவர் எமது மக்களுக்கான மிக அவசரமான பல விடயங்களை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
    உங்கள் கேள்விக்கும் பதில் இதுதான். அதாவது, தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு பலமற்ற நிலை எழக்கூடும் என்று தோன்றினாலும் எம் மக்களின் நலன் சார்பாக நாமெல்லோரும் இப்பொழுதிருந்தே சிந்திக்கத் தொடங்கினோமானால் வருங்காலத்தில் உருப்படியாக மக்கள் சார் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றே கருதுகின்றேன்.

Related posts