ஜனாதிபதி தேர்தலின் வெற்றி நாயகனை தீர்மானிக்க வல்ல சக்தி சுதந்திர கட்சியே – முஸ்லிம் அமைப்பாளர் ஜாஹீர் திட்டவட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் வெற்றி நாயகனை தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகின்றது என்று இக்கட்சியின் காரைதீவு முஸ்லிம் பகுதிகளுக்கான அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான ஏ. எம். ஜாஹீர் தெரிவித்தார்.

 
சுதந்திர கட்சியின் கட்சி புனரமைப்பு பணிகளுக்கு அமைய அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் காரைதீவு முஸ்லிம் பகுதிகளுக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பிற்பாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
 
சுதந்திர கட்சி எந்த பக்கம் சாய்கின்றதோ அந்த பக்கமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அடையும் என்பது திண்ணம் ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடைக்கண் பார்வை கிடைத்தால் போதும் அந்த வேட்பாளர் நிச்சயம் வெற்றி அடைந்து விடுவார். அவர் கை அசைத்து காட்டுகின்ற வேட்பாளருக்கு வேலை செய்வதற்கு கட்சி செயற்பாட்டாளர்களும், வாக்களிப்பதற்கு நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
எமது தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசியல் சாணக்கியம் நிறைந்தவர். பொறுத்தார் புவி ஆள்வார் என்கிற பழமொழிக்கு அமைவாகவே அமைதியாக உள்ளார். கள நிலைவரங்களை மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றார். அவர் உரிய நேரத்தில் மிக சரியான தீர்மானத்தை அறிய தருவார்.
 
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அவரின் வழிகாட்டலில் சுதந்திர கட்சி மகத்தான வெற்றியை பெற்றதுடன் நாடளாவிய ரீதியில் பல உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கிற சக்தியாகவும் பரிணாமம் எடுத்தது. 18 இலட்சம் வாக்குகள் எமக்கு அத்தேர்தலில் கிடைத்தன. 1134 உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஒரு தவிசாளரையும், 05 உப தவிசாளர்களையும் பெற்றுள்ளோம். அவற்றுள் சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி, திருக்கோவில் ஆகிய இடங்களில் உள்ள பிரதேச சபைகளில் தவிசாளர்களையும், ஆட்சியையும் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறியே பிரதி தவிசாளர் பதவிகளை அடைந்துள்ளோம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன எமது உதவியை பெற்றே ஆட்சியை கையில் எடுக்க முடிந்தது. நாம்தான் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அதீத வெற்றி பெற்று கூடுதல் ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்பதையும் இத்தருணத்தில் அறுதியும் உறுதியுமாக கூறி வைக்கின்றேன்.
 

Related posts