நூருல் ஹுதா உமர் –
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்விவலய சாய்ந்தமருது கோட்டத்தின் கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின்” கீழ் ஒரு கோடி தொண்ணுறு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த 3 மாடி வகுப்பறைக் கட்டிடத்தினை திடீரென மாகாண மற்றும் வலயக் கல்வி உயர் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (13) ஜூம்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிக்கு முன்னால் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பமான இவ்வார்ப்பாட்ட பேரணி சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று இடைநிறுத்தப்பட்ட கட்டடத்தினை மீண்டும் கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கான மகஜரினை பிரதேச செயலக கணக்காளரிடம் கையளித்தனர்.
இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் பல்வேறு வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கு முகமாக கடந்த ஒருவார காலமாக சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைகள் அனைத்தும் கற்றல், கற்பித்தல் செயற்பாடின்றி காணப்பட்டதுடன் அல்-ஜலால் பாடசாலை சமூகத்தினரால் பாடசாலை முன்றலிலும், வலயக்கல்வி அலுவலக எதிரிலும் தொடர்ச்சியான கண்டன ஆர்ப்பார்ட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.