ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெகுவிரைவில் தீர்மானிக்குமாறு அக்கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
இதனை அமைச்சர் சஜித் பிரேமதாஸவே, திங்கட்கிழமை அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் இன்னும் காலதாமதம் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு தாமதம் செய்வதானது கட்சிக்கும், அதேபோல் நாட்டுக்கும் ஏற்படுத்தப்படுகின்ற பாதகமான செயலாகிவிடும் என்றும் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் சஜித், அதனை ஜனநாயகத்துக்கு எதிராக விடுக்கப்படுகின்ற மிகப்பெரிய அடி என்றும் கூறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்துக்குத் தீர்வு எடுக்க முடியாவிட்டால், மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை அழைத்து தீர்மானிக்க முடியும் என்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் யோசனை முன்வைத்துள்ளதாக அமைச்சர் சஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.