இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் ஜ.போ.க துளசி
இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேசரீதியாக ஒரு இறைமையுள்ள நாடாக திகழ்ந்துவரும் இலங்கை அரசு தமது அரசியல் உரிமைகளை பெறும்பொருட்டு நீண்டநெடும் காலமாக போராடிவரும் ஆட்சி அதிகாரத்தில் உரிமையும் வகிபாகமும் உள்ள தமிழர்தரப்பை காலத்துக்குகாலம் பல்வேறு வழிவகையில் தமது இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றது. அதன் உச்சமாக கடலையும் கடல்வெளியினை சாட்சியாக வைத்து முள்ளிவாய்க்கால் போர்வலயத்தில் ஆகாய கடல் தரைவழியூடாக முற்றுகையினை இறுக்கி தனது சொந்தமக்களின் மீதே பெரும் அவலத்தை திணித்துச்சென்றுள்ளது.
தமது குடிமக்களின் மீது உலகின் எந்தவொரு அரசும் மேற்கொண்டிராத இன அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்டிருக்கின்றது. உலகின் மனித உரிமைகள் சிறுவர் பெண்கள் உரிமைகள் தொடர்பில் பல்வேறு நியாயாதிக்கங்கள் கருத்தாடல்கள் நிலவிவரும் நிலையில். அத்தனை மானிடநேயங்களும் நாகரீகங்களும் வெட்கிதலைகுனியும் அளவில் நாம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருக்கின்றோம். அத்தனை இடர்பாடுகளின் பின்னரும் தமிழர்கள் உயிர்க்கொலைக்கு நீதியான விசாரணைகளோ பொறுப்புக்கூறல்களோ எதுவுமின்றி அரசியல் கைதிகளின் தீர்வற்ற சிறையடைப்பு இராணுவ இருப்பிற்கான தமிழர் நிலப்பறிப்பு என தமிழர் வாழ்வியல் மீட்சிபெறா நிலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்காலின் ஒன்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நிகழ்தேறியுள்ளது.
இழிநிலை மாறி தமிழர் தம் வாழ்வு மீட்சிபெற காலாதிகாலமாய் தம் ஆன்மாவை அர்ப்பணித்த அத்தனை புனிதர்களையும் நினைவில் நிறுத்தி நினைதுருகின்றோம்.
ஓர் காலத்துயரின் ஒன்பது ஆண்டுகள் கடந்து போனபின் இன்றைய ” முள்ளிவாய்க்கால்” நிகழ்வு ஈழத்தமிழினத்திற்கு ஒரு அறைகூவலை விட்டுச்சென்றிருக்கின்றது.
நாம் போனபின்பு எம் ஆன்மா உங்களோடு பேசும், அப்போது எங்கள் குருதி தோய்ந்த மண்ணில் ஈழத்தமிழினம் ஒன்றாய் சேர்ந்து பயணிக்கும். ” ஒரு செங்களம் மீதினில் உங்களோடு நின்று ஒரே இலக்கிற்காய் பயணித்தோம் அந்த ஒற்றை தேசத்து கனவுகளின் மீது ஏறிக்கொண்டு உன் மனச்சாட்சியுடன் பேசு ஈழத்தமிழினமே என இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.