மஹிந்த,பஸில், நாமல் ஆகியோருடன் தைரியமாக சென்று பேசினேன் : பா.உ ஹரீஸ் !!

சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய அரசு செயற்பட தொடங்கி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் நான் சம்மந்தமாக பல உணர்வுகள்,பல கதையாடல்கள் நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் இந்த அரசின் பொறிமுறையில் ஒரு அங்கம் என்ற ரீதியில் இந்த தேர்தலுக்கு பின்னர் முதல் முதலாக பகிரங்கமான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதாக இந்த நிகழ்வினை கருதுகின்றேன்.
 
 நான் அரசியல் ரீதியில் முதிர்ச்சி பெற்ற ஞானியும் அல்ல அதே நேரம் எதுவும் தெரியாத கடைக்குட்டியும் அல்ல. ஒரு சராசரி அரசியல் வாதியாக இருக்கின்றேன். இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடுதலை புலிகளின் உச்சக்கட்ட யுத்தகாலத்திலும் கூட எமது அரசியல் கொள்கை என்பது அணிசேராக் கொள்கை அல்லது நடுநிலை கொள்கை என்னும் வகிபாகத்தை எமது முன்னைய தலைமைகள் மிக கட்சிதமாக பேணிவந்தது. 
 
குறிப்பாக எமது முன்னைய தலைமைகள் தன்னிச்சையாக முடிவெடுத்த வரலாறுகள் இல்லை. மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தனிமனித கொள்கை இல்லாமல் கொள்கை வகுப்பாளர்கள் குழாம் அவருக்கு பின்னணியாக இருந்து அவருடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றனர்.என . கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நேற்று  (28) கல்லூரி அதிபர் யூ.எல் அமீன் தலைமையில் இடம்பெற்ற வருடந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்…
 
இந்த நாட்டில் நாம் விரும்பியோ விரும்பாமலோ பெரும்பான்மை இனம் சிங்களவர்கள் எனும் இயற்கை நியதியை நாம் மாற்றமுடியாது.தமிழ் தலைவர்கள் அதனை மாற்ற முற்பட்டார்கள் இந்த தேசத்தில் சிங்களவர்களுடன் வாழமுடியாது என்பதற்காக சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் செயற்பாட்டில் இருந்தும், ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் 50 ற்கு 50 எனும் கொள்கையில் இருந்தும், தந்தை செல்வநாயகத்தின் சமஸ்டி கட்சியின் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து செல்லுகின்ற உரிமை என்கின்ற சிங்கள எதிர்ப்பு வாதத்தில் இருந்தும் அதன் பின்னர் வந்த அமிர்தலிங்கத்தின் ஈழக்கொள்கையில் இருந்தும் அத்தோடு இணைந்ததாக பிரபாகரனின் ஈழதேசத்திற்கான போராட்டத்தில் இருந்தும் இந்த நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் என்பது சிங்கள மக்களின் எதிர்ப்பு அரசியலின் துருவ நிலைக்கு சுமார் நூற்றாண்டு காலமாக கொண்டு வந்தது.
 
எமது முஸ்லிம் சமூகம் இந்த அக்கினி பரீட்சையில் யாருக்கும் துனைபோகமல் மிக துல்லியமாக பயணித்த சமூகம் இந்த சமூகத்தின் எதிர்பார்ச்சல் என்பது சாதாரணமாக இலங்கைக்குள் கட்டியெழுப்பப்பட்ட விடயம் ஒன்றல்ல அமெரிக்காவின் ஜனாதிபதி டெனால்ட் ரெம்ப் கூட முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கொண்டுவந்துதான் ஆட்சியை கைப்பற்றினார். அதுபோல தெற்காசியாவில் நரேந்திர மோடியின் கொள்கையை குறிப்பிடலாம்.
 
இந்த நாட்டில் ஆட்சியை கைபற்றுவதற்கு ஆட்சியாளர்களின் மன எண்ணங்கள் அவர்களின் பலவீனங்கள் என்பவற்றை நான் நன்கு அறிந்தவன். ஏனென்றால் நான் எந்த அரசியல் தலைமையையும் எதிரியாக பார்க்கவில்லை அவர்களை சந்திப்பதற்கு பின்னிற்பதும் இல்லை.நான் முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் அத்தோடு கடந்த ஆட்சியில் ஒரு இராஜாங்க அமைச்சர் கடந்த டிசம்பரில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமராக வந்தவுடன் என்னுடன் உதவி கோரியபோது நான் தைரியமாக சென்று அவருடன் பேசினேன் அதற்கான கணிப்பு என்னவென்றால் அவர் சிங்கள பெரும்பாலான மக்களின் பிரதிநிதி என்கின்ற அந்தஸ்த்தில் நான் சென்று பேசினேன்.அதுபோல பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோருடன் பேசினேன். இதில் மறைக்கவேண்டிய விடயம் எதுவும் இல்லை.
 
எமது முஸ்லிம் சமூகம் கடந்த 20 வருடமாக அவருடன் மோதி இருக்கின்றோம் கடந்த 2005 அவர் வெற்றி பெறுவார் என்று தெரிந்தும் நாங்கள் அவருக்கு எதிராக நின்று அவரை தோற்கடிக்க முற்பட்டோம் அதுபோல் 2010ம் ஆண்டும் அவரை தோற்கடிக்க முயன்றோம்.அத்துடன் 2015ம் ஆண்டு மக்கள் சக்தியாக நின்று சிங்கள பெரும்பான்மை மக்களும் அவரை வெறுத்ததனால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.ஆனால் 2019ம் ஆண்டு அவரை சிங்கள தேசத்தில் புத்திஜீவிகள்,வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல மக்கள் ஏகமனதாக தீர்மானித்து இருந்த நிலையில்தான் ஈஸ்டர் குண்டுதாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலை செய்தது எமது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு பயங்கரவாதி சஹ்ரான் என்பவன்.
 
அதன் பின்பு இந்த நாட்டின் நிலைமையினை தலைகீழாக புரட்டி போட்டது தமிழ்,சிங்கள பிரிவினைவாதமாக இருந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலாக மாற்றப்பட்டது.மாற்றியவர்கள் அரசியல்வாதிகளை விட இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மதகுருமார்கள் என சகல தரப்பினரும் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்பு மிக வேகமாக பிரச்சாரம் செய்து கொண்ட நிலையில்தான் எங்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறியது. 
டாக்டர் சாபி மீது நடைபெற்ற விடயங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் என தொடர் கதையாக சென்ற போதுதான் கடைசியில் கண்டி தலதா மாளிகையில் அதுரலிய ரத்னதேரர் அவர்களினால் இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி இருந்த பொழுதுதான் நான் குறிப்பாக அதில் எச்சரிக்கையடைந்து இது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் எனவே இது அடுத்த கட்டமாக இனத்திற்கு எதிரான போராட்டமாக மாறுவதற்கு இடையில் நாம் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தேன் அதனால் பதவி விலகி இருந்தோம்.ஆனால் நான் விரும்பினேன் இந்த இராஜினமா இந்த ஜனாதிபதி தேர்தல் வரையும் நீடித்து இருக்க வேண்டும்.
 
இந்த முஸ்லிம் சமூகம் நடுநிலை சமூகமாக இருக்க வேண்டும் நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை இரண்டு தரப்பு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் முன்வைப்போம் என்ற உத்வேகம் என்னிடம் இருந்தது அது சம்மந்தமாக நான் சகலரிடமும் பேசினேன் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் நான் மட்டும் அமைச்சு பதவி எடுக்காமல் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்தேன்.
 
எனவே எமது நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம் மக்களின் அரசியல் அமைப்பு சார்ந்த உரிமைகள்,மற்றும் வாழும் உரிமைகள் இந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எவ்வாறான அடிப்படையில் கையளப்படுமோ! என்ற பயமும்,பீதியும் எங்களிடம் உள்ளது.எனவே எமது எதிர்காலம் சம்மந்தமாக நாங்கள் இன்னும் இன்னும் தனிமனித தேவைகளுக்கு அப்பால் ஒரு சமூகமாக ஒரு கொள்கை வகுப்பாளர்களை கொண்டு இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

Related posts