மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுகளில் அதி திறன்களை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் முகமான “வர்ண இரவு 2019” எனும் தொனிப்பொருளிளான கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்விப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் கே.ரவீந்திரன், சிரேஸ்ட கணனிப் பொறியியலாளர் எஸ்.பகீரதன் மற்றும் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களான பி.சுரேஸ்காந், எஸ்.எச்.பிரிதௌஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவ சங்கத்தினர் உட்பட விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2019ம் வருடத்தில் விளையாட்டுகளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்கு முழுவர்ண விருதுகள், அரைவர்ண விருதுகள் என்ற ரீதியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 20 முழுவர்ண விருது கௌரவிப்புகளும், 37 அரைவர்ண விருது கௌரவிப்புகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி மாணவர்கள் இருவர் கிரிக்கட் மற்றம் கராத்தே போட்டிகளில் தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கங்களினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்ததன் நிமித்தம் அவர்களும் இந்நிகழ்வில் விசேடமாகக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.