அம்பாறை மாவட்டத்தில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இம்மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் வசித்து வந்த 571 குடும்பங்களைச் சேர்ந்த 1899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
தாழ்நிலப் பிரதேசங்களில் வசித்து வந்த பெருமளவிலான பொதுமக்கள் தமது உறவினர்களின் இல்லங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர் மழையுடனான காலநிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், ஆலையடிவேம்பு, உகன, காரைதீவு மற்றும் தமண ஆகிய பிரதேச செலகப் பிரிவுகளிலேயே அதிகமானோர் இம்மழையுடனான காலநிலை காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செலகப் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1602 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செலகப் பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், உகன பிரதேச செயலகப் பிரிவில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும் மழையுடனான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் எக்கல் ஓயா பகுதியில் 89.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் 72.5 மிலிலி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 71.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், சாகாமம் பிரதேசத்தில் 67.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பகுதியில் 62.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், றூபஸ் குளப் பிரதேசத்தில் 50.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதுடன், இடியுடன் கூடிய மழை பொழியும் சந்தர்பத்தில் பலத்த காற்றும் இப்பிராந்தியத்தில் வீசி வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, சாய்ந்தமருது, அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, மருதமுனை, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுகின்றன. சில பிரதேசங்களில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இம்மாவட்டத்தின் தாழ்நில விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதால் பெருந்தொகையான விவசாயச் செய்கை பாதிப்படைந்துள்ளது. அத்தோடு சில பகுதிகளில் உள்ள கால்வாய்கள், நீர் நிலைகள் போன்றன பெருக்கெடுக்கும் மழை நீரினால் உடைப்பெடுத்துள்ளன.
கடற் பிராந்தியத்தில் சில வேளைகளில் பலத்த காற்று வீசி வருவதுடன், இடியுடன் கூடிய மழையும் பெய்தும் வருகின்றது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. சில கரையோரப் பிரதேசங்களில் கடலலை சுமார் பத்து அடிக்கு மேல் எழுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையால் இம்மாவட்டத்தின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையால் இம்மாவட்டத்தின் மீன்களின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. மரக்கறிச் செய்கைகளுக்கும் மழையுடனான காலநிலை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதால் மரக்கறிகளின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
–