தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மாத்திரம் கறிவேப்பிலைகளாக மாத்திரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகின்ற பெருந்தேசிய கட்சி அரசியல்வாதிகளுக்கு வருகின்ற பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று ஜன சஹன ஸ்ரீலங்கா மனித நேய ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் துஷித தேசப்பிரிய தெரிவித்தார்.
நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் விசேட தூதுவராக வருகை தந்த இவரின் மேற்பார்வையில் புதிய இடதுசாரி முன்னணியின் அம்பாறை மாவட்ட அணி வார இறுதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து கூறியபோது இவர் தெரிவித்தவை வருமாறு:-
எலும்பு துண்டுகளுக்கு வால் ஆட்டுகின்ற நாய்களாகவே தமிழ் பேசும் மக்களை அந்த அரசியல்வாதிகள் நினைத்து நடத்துகின்றார்கள். நாய்களுக்கு இருக்கின்ற நன்றி கூட அந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக தமிழ் பேசும் மக்களின் வீடுகளுக்கு தேடி வந்து உறவு கொண்டாடுவார்கள்.
ஆனால் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிற்பாடு திரும்பியும் பார்க்க மாட்டார்கள். ஆறு கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி, கடந்த பிற்பாடு நான் ஆரோ, நீ ஆரோ என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது. ஆனால் எமது மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள்.
ஒவ்வொரு தலைவர்களின் சுயரூபங்களும் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
நான் முன்னாள் அமைச்சர் தயா கமகேயுடன் மிக நெருக்கமாக ஒரு காலத்தில் பணியாற்றியவன். அவர் தமிழ் பேசும் மக்களை தேர்தல்களுக்கு பின்னர் நடத்துகின்ற விதம் எனக்கு பிடிக்கவே இல்லை. எனது மன சாட்சி என்னை உறுத்தியது. ஆகவே அவருடன் முரண்பட்டு கொண்டு வெளியேறினேன்.
நாம் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பாடுபட்டு இருக்கின்றோம்.அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு எந்த சிறிய நன்மையைத்தானும் பெற்று கொடுக்க முடியவில்லை. எனவேதான் அவர்களை விட்டு விலகி மக்கள் நலன் சார்ந்த முகாமில் இணைந்து இருக்கின்றோம்.
எமது மக்களும் அவர்களை நிரந்தரமாக தூக்கி எறியும் நாள் தொலைவில் இல்லை. இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உண்மையிலேயே சிறுபான்மை உறவுகளுக்காகவும் என்றென்றும் குரல் கொடுத்து வருபவர். ராஜபக்ஸ சகோதரர்களின் நன்மதிப்புக்கு பாத்திரமான முதுபெரும் அரசியல்வாதி.
இவரை போன்ற நல்ல அரசியல்வாதிகளின் கரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓஒங்குதல் வேண்டும். அதற்கான அத்திவாரத்தை வருகின்ற பொது தேர்தலை ஒட்டி அம்பாறை மாவட்டத்தில் போட்டிருக்கின்றோம். அவருக்கு கிடைக்கின்ற வெற்றிகள் சிறுபான்மை மக்களின் உரிமை, அபிவிருத்தி, பொருளாதார மீட்சி, வாழ்வியல் எழுச்சி ஆகியவற்றுக்கு நிச்சயம் வழி அமைத்து தரும் என்பதில் மாற்றம் இல்லை.