மாற்றுத் தலைமைத்துவம்தேவை என்பது நகைப்புக்குரிய விடயம்…

மாற்றுத் தலைமைகள் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் கடந்த காலங்களில் அரசியலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கைகளில் அதிகாரம் இருந்த காலத்தில் செய்ய முடியாதவற்றை மீளவும் மாற்றுத் தலைமை என்று வந்து பெற்றுக் கொடுக்கப்போகின்றோம் என்பது உண்மையில் நகைப்புக்குரியதாகவே இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
 
இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஜனநாயகப் போராளிகள் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் போராளிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக உத்தேசித்துள்ளோம். யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் தொடர்ந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியற் கைதிகள் சார்பில் ஜனாதிபதியைச் சந்தித்து அவர்களைப் பொது மன்னிப்பின் அடிப்படையிலாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஜனதிபதியிடம் வலியுத்துவதற்காக உத்தேசித்துள்ளோம்.
 
போராளிகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தலைமைத்துவச் சபைக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த எங்கள் தலைமைத்துவமும் இருக்கின்றது. குறிப்பாக அரசியற் கைதிகளின் விவகாரங்கள் தொடர்பில் எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இன்றை கூட்டத்தில் எமது கட்சி சார்பில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை முதலாவது சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அதன் தலைமைத்துவச் சபை ஒன்றுகூடி ஆராயவுள்ளோம்.
 
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கையில் அதிகாரங்கள் வரும் வரைக்கும் முன்னாள் போராளிகளுக்கான அபிவிருத்தி, அவர்களது வாழ்வாதாரம் தொடர்பில பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். எதிர்வரும் காலங்களில் போராளிகளது ஜனநாயக வெற்றி பல விடயங்களைச் சிறந்த முறையில் கையாழ்வதற்கு வாய்ப்பாக அமையும். அதேவேளை அண்மையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஒரு லெட்சம் வேலை வாய்ப்புக்களில் போராளிகளுக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என நம்புகின்றோம்.
 
மாற்றுத் தலைமைத்துவம் என்பது பெயரளவில் மட்டும் இல்லாமல் கொள்கை அளவிலும் இருக்க வேண்டும். மாற்றுத் தலைமைகள் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் கடந்த காலங்களில் ஜனநாயக அரசியலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கைகளில் அதிகாரம் இருந்த காலத்தில் செய்ய முடியாதவற்றை மீளவும் மாற்றுத் தலைமை என்று வந்து பெற்றுக் கொடுக்கப்போகின்றோம் என்பது உண்மையில் நகைப்புக்குரியதாகவே இருக்கின்றது.
 
காணாமல் போனார் விவகாரம தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம். எதிர்வரும் காலங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனநாயகப் போராளிகளாகிய நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்

Related posts