சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உருவாக்குவது தொடர்பில் கல்முனைப் பிரசேத்தில் உள்ள தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ குறிப்பாக எந்தப் பிரதேசத்திற்கும் அநீதி இழைக்கப்படாமல் பாரம்பரியமான முறையில் அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடியதான நான்கு உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட்டு அதற்காக நான்கு பிரதேச செயலகங்களும் அமையவுள்ளது என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் இருந்து தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் எஸ்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
கல்முனையில் உள்ள தமிழ் மக்களுக்காக உள்ளுராட்சி சபை ஒன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கு யாரும் தடையில்லை. எல்லைப் பிரச்சினையே அங்குள்ள பிரான பிரச்சினையாக இத்தனை காலமும் இழுபறி நிலையாக இருந்ததற்கு காரணமாகும்.
கடந்த 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்முனைப் பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகள் இருந்திருக்கின்றன. 1987இற்குப் பின்னர்தான் இந்நான்கு சபைகளும் ஒன்றாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு நாம் மீண்டும் அவைபோன்று உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதன் மூலம் நான்கு பிரதேச செயலகங்களை அமைத்து விட முடியும். இதன் மூலம் எல்லைகள் உருவாக்கம் பெறும். இதனால் நீண்ட காலமாக பிரச்சினையில் இருந்து வந்த எல்லைப் பிரிப்புப் பிரச்சினை முற்றுப் பெறும்.
இப்பிரதேசத்திற்கான உள்ளுராட்சி சபைகள் உருவாக்குவது தொடர்பில் மரபு முறையில்தான் தீர்வுகளை பெறவேண்டியுள்ளது. கடந்த 87ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி நான்கு சபைகளாக அனைத்து இன மக்களும் ஒற்றுமைப்பட்டு வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு அனைத்து இனத்தவர்களும் ஒருவருக்கொருவர் ஒற்றுமைப்பட்டு நிம்மதியாக வாழ்வதற்குரிய நிலைமையினை நாம் உருவாக்க வேண்டும்.
பொத்துவில் கல்வி வலயம் உருவாக்கம் தொடர்பில் கட்சி ஒன்றின் தலைமை என்ற ரீதியிலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக இருந்ததன் காரணத்தினால் கடந்த காலத்தில் நான் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்திருந்தேன். மாகாண சபையில் கூட எமது பிரதிநிதிகளைக் கொண்டு பல செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தேன்.
அன்று கல்வியமைச்சராக இருந்த பந்துல குணவர்த்தனவினைக் கூட பொத்துவில் பிரதேசத்திற்கு அழைத்து வந்து கல்வி வலயம் உருவாக்கத்தற்கு சாதகமான நிலைமையினை மேற்கொண்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் வழி வகை செய்தேன்.
பொத்துவில் கல்வி வலயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக கோரிக்கையினை விடுத்து வருகின்றார்கள். அவர்களது நியாயமான கோரிக்கைக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் வகையில் அன்று முதல் இன்று வரை நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து திருக்கோவில் கல்வி வலயம் பிரிக்கப்பட்டது. இனத்தினை மையப்படுத்தி அக்கல்வி வலயம் பிரிக்கப்பட்டதற்கு நாம் எதிர்ப்புகள் காட்டவில்லை.
பொத்துவில் கல்வி வலயம் பிரித்துக் கொடுப்பது தொடர்பில் உப கல்வி வலயம் ஒன்றை நாம் உருவாக்கிக் கொடுத்ததன் பின்பும் அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்த பின்பும் ஏன் இதுவரை அதற்கான முடிவு எட்டப்படவில்லை என தற்போத பேச வேண்டி ஏற்பட்டது. அதனால் பிரதமரோடு நான் பேசினேன். அதற்கான முயற்சிகளையும் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு என்னைப் பணித்திருக்கின்றார்.
அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் அக்கரைப்பற்றில் உள்ள இவர் கல்வி வலயம் பெற்றுத் தரமாட்டார் என்று துவேசங்கள் பல பேசி தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்திற்கும் சென்று துவேசங்களையும் பிரிவினையினையும் பேசிப் பேசி வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள்.
நமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இரண்டு விடயங்களை கூறுவதன் மூலம் உடனடியாக மக்களை உணர்ச்சி வசப்படுத்தி விட முடியும் அதில் இன வாதம் இதனை மக்கள் மத்தியில் சொல்கின்றபோது உடனடியாக பத்திவிடும். மற்றொன்று பிரதேச வாதம். இவை இரண்டினையும் பேசிப் பேசி கடந்த காலங்களில் நமது மக்களை ஏமாற்றி சிலர் அரசியல் செய்து நமது மக்களையும் நமது சமூகத்தினையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
நமது முஸ்லிம்களில் சிலர் பணத்திற்காகவும், பக்குவமில்லாமலும் சோரம் போகின்றார்கள். அதுமாத்திரமல்லாமல் நிலையறியாத சில ஊடகங்களும் நமது சமூகத்தினையும் நமது மக்களையும் நாட்டையும் காட்டிக் கொடுத்து விட்டார்கள்.
இன்றைய கால கட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள பெருந் தொகையான மாற்றுக் கட்சியினர் எமது கட்சியின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக முஸ்லிம் சமூகமும் அரசியல் கட்சிகளில் உள்ள இரண்டாம் மூன்றாம் தலைமைகளும் சிந்தித்து தேசிய காங்கிரஸ் கட்சியோடு இணைவது நமது தேசத்திற்கும், நமது மக்களுக்கும், நமது கிழக்கு மாகாணத்திற்கும் நன்மை என்பதை நன்குணர்ந்த நமது உடன்பிறப்புகள் கடந்த பல வாரங்களாக எமது தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த வருகின்றனர்.
கடந்த காலங்களில் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது எவ்வாறு உறவுடன் இருந்தோமோ அந்த உறவினை புதுப்பிக்கின்ற நிலைமையும் இடம்பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.
இந்நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் நிம்மதியாக வாழ வைப்பதன் மூலம்தான் முஸ்லிம் சமூதாயத்தினையும் நிம்மதியடையச் செய்யலாம் என்ற திடமான நம்பிக்கையோடு நான் இருந்ததன் காரணத்தினால்தான் தேசிய காங்கிரஸ் கட்சியினை ஸ்தாபித்து அதன் மூலமாக நமது மக்களுக்கான விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்நிகழ்வின் போது பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மாற்றுக் கட்சியினைச் சேர்ந்த பெருந் தொகையானோர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.