சுற்றுலா வரும் எவருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகளை மறு அறிவித்தல் வரை வாடகைக்கு விட வேண்டாம் என காத்தான்குடி நகரசபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலக சுகாதார நிறுவனமானது,கொரோனா எனும் கோவிட் 19 வைரஸை உலக கொள்ளை நோயாக அறிவித்திருக்கும் நிலையில் எமது நாட்டிலும் இவ்வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நோயான இவ்வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையாதலால் அனைத்து பொதுமக்களும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நிலைமைகள் சீராகி மறு அறிவித்தல் வரை வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் எவருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு விட வேண்டாம் என்றும்,காத்தான்குடி மக்கள் எவரும் தேவையற்ற வெளியூர் பயணங்கள் சுற்றுலாக்கள் செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறும் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.