இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு மறை மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 2020 பொதுத் தேர்தலில் தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (14) மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் அருட்பணி சுஜித்தர் சிவநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மதகுருமார்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், தமிழீழ விடுதலைக் கழகத்தின் உபதலைவர் கே.விமலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் த.சுரேஸ், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி டி.சிவநாதன், மட்டக்களப்பு சிவில் சமூக ஒன்றியங்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், சிவல் சமூக அமையத்தின் பிரதிநிதி டி.நிதர்சன், மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைய செயலாளர் செல்வி அனோஜா உட்பட சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியலளார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தற்போதைய நிலையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசியற் கட்சிகளின் ஒற்றுமையின் முக்கியத்துவம், ஒற்றுமைப்பட முடியாமைக்கான காரணங்கள், ஒவ்வொரு கட்சிகளினதும் கொள்கை விளக்கங்கள் போன்றன தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.