அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து 128வருடங்களாகின்றன.
அவர் மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்தில் பிறந்தார்.
சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர். அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும் அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார்.
இன்றும் கண்ணகை அம்மனாலயத்தைப் பரிபாலித்து வருகின்ற விஜயராஜன் குடியார் என்று சொல்லப்படுகின்ற வம்வத்தைச் சேர்ந்தவர். அவர் அக்காலத்தின் விதானையாக (பொலியானை – அக்கால பொலிஸ் தலைமைக்காரர்) இருந்தார்.
அடிகளார் இயற்பெயரான தம்பிப்பிள்ளை என்ற நாமத்தோடு பிறந்தார். அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்ட்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான ‘மயில்வாகனன்’ எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர்.அதனால் அவரது பிறப்புப் பதிவில் தாமதமாயிற்று. ஆதுனுர்லு; அவரது பிறப்பத்தாட்சிப்பத்திரம் மே மாதத்தில்தான் பதிவுவைக்கப்பட்டது. அதற்காக அவர் மேயில் பிறக்கவில்லையென்பதை கவனத்திற்கொள்க.
மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி பலகோணங்களிலும் எழுதமுடியும்.
1898 இல் ஆறுவயதில் பள்ளியில் சேர்ந்தார். 1902-இல் மெதடிஸ்ட் பள்ளியிலும் பின்பு மட்டக்களப்புக் கல்லூரியிலும் பிறகு ஆர்ச் மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார்.
1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ் சங்கப் பண்டிதர் என்னும் பெருமையையும் பெற்றார்இ 1919ல் தனது சொந்த முயற்சியில் கற்றுஇ இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி. தேர்விலும் சித்தியடைந்தார்.
1924ல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து ‘பிரபோதசைதன்யர்’ என்னும் பிரமச்சரிய நாமம் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பெளர்ணமியில் துறவறம் மேற்கொண்டு ‘சுவாமி விபுலானந்தர்’ என்னும் பெயர் பெற்றார்.
1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர் மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பரிய கல்வித் தொண்டு செய்தார்.
பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண ‘சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார்.
1931ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.அதாகப்பட்டது அவர் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியராக துலங்கினார்.
அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக அறிவியல் கலைஞராக ஆத்மீக ஞானியாக ஆற்றல்மிகு பேராசிரியராக இயற்றமிழ் வல்லுனராக இசைத்தமிழ் ஆராய்சியாளராக நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தார்.
தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் இனத்திற்காக இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.
விபுலானந்த அடிகளார் மனிதாபிமானம் மிக்கவர் ஆதித் தமிழ்க் குடியின் அறவழியில் வந்த மறத்தமிழன்.. பாதியில் முளைத்தெழுந்த சாதிக் கொடுமைதனைச் சாடித் தகர்த்தெறிந்த சாதனைத் தமிழன் அவர் அன்னார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட ஆதி திராவிடர் வாழ்ந்த திருவேட்களம் என்னும் சேரிக்குச் சென்று பாலர் படிக்கப் பள்ளிகள் அமைத்தார்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா(M.Ed.)
காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்ற முன்னாள் தலைவர்.