ராஜபக்ச ரெஜிமென்டை மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் தமது கழுத்தில் தாமே சுருக்கை போட்டுக்கொள்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
அத்துடன் ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்ற குரல் கொடுக்காத பல ஊடகவியலாளர்கள், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், காணாமல் போகக்கூடும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், ராஜபக்ச ரெஜிமென்டை ஆட்சிக்கு கொண்டு வர குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்களும் காணாமல் போகக்கூடும். ராஜபக்சவினரின் நடைமுறை இதுதான். இதனை நான் மீண்டும் நினைவூட்ட வேண்டியதில்லை.
நான் கூறும் இந்த விடயத்தை பத்திரிகைகளில் வெளியிட மாட்டார்கள். தொலைக்காட்சிகளும் ஒளிப்பரப்பாது. ஆனால் எமது கட்சியினர் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல
ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இது ராஜபக்ச ரெஜிமென்ட் 2 என அழைக்க முடியும். உங்களுக்கு ஜனநாயகம் தேவையா அல்லது ராஜபக்ச ரெஜிமென்ட் 2 தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.