இன்று எமது நாட்டில் மட்டுமல்லாது ,உலகளாவிய ரீதியில் மூன்று வகையான பசிகள் காணப்படுகின்றன .
- ஆளும்வர்க்கத்தின் அதிகாரப்பசி.
- கொரோனாவைரஸின் கொலைப்பசி.
- வறுமையாளர்களின்வயிற்றுப்பசி.
இப்படியான மூவகை பசிகளில் எப்பசிக்கு முக்கியத்துவம் அல்லது முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது அந்தந்த நாடுகளின் ஆளும் அரசாங்கங்கள் மூலமாகவும்,அறிவுசார் புத்திஜீவிகள் மூலமாகவும் தீர்மானிக்கப்படுகின்றன. சில நாடுகளில் புத்திஜீவிகளின் அறிவியல் பூர்வமாகக் கருத்துக்களுக்குச் செவிமடுத்து,மக்கள் சார்ந்த விஞ்ஞான பூர்வமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன .
முற்போக்கான நாடுகள் அதிகாரத்தை விடவும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு நடந்து கொள்கின்றன. இவ்வாறான நாடுகள் பொறுப்புமிக்க அரசாங்கத்தினைக் கொண்ட நாடுகளாகக் கணிக்கப்படுகின்றன .
இன்னும் சில நாடுகள் மக்கள் சார்ந்த நிலைப்பாடுகளைத் தவிர்த்து,அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடாமல்,தமது அதிகாரத் தேவைக்கும் அதிகாரப் பசிக்கும் முன்னுரிமை அளித்து முடிவுகள் எடுக்கின்றன . இந்நாடுகளை சர்வாதிகாரமிக்க பிற்போக்கான ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளாகக் கணிக்க முடியும் .
இன்றைய நிலையில் எமது நாட்டினைக் எடுத்துக் கொண்டால், ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கின்றன? என்பதைப் பற்றி ஒவ்வொரு குடிமகனும் விழிப்பாக இருந்து விளங்கிக் கொள்ள வேண்டும் .
உலகளாவிய ரீதியில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸின், மக்கள் மீதான தாக்குதல்கள் படிப்படியாக உலகம் எல்லாம் வியாபித்துள்ளன . வல்லரசு சக்தி உள்ளதா? இந்த வைரசு சக்தி உள்ளதா ? என்று நினைக்கும் அளவுக்கு கொரோனாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ளது. வல்லரசுகளின் வல்லரசு தன்மைகளை இந்த உயிரியல் ஆயுதம் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
சீனா அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் இந்த வைரசுக்கு முகம் கொடுக்க முடியாமல்>திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. இப்படியாகக் கொரோனா வைரசின் வில்லத்தன்மை கதாநாயக வல்லரசு மக்களையே கொன்றும் – வென்றும் வருகின்றது. இன்னும் இந்த வைரஸ் நோய்க்கு உலகில் ஒரு நாடும் மருந்தினைக் கண்டு பிடிக்கவில்லை. எனவே எமது நாடு மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தாக வேண்டும் .இவ்விடயமே முக்கியமானது முன்னுரிமையானது.
வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை கோலுவது போல் இந்நோய்த் தொற்று வராமல் தடுக்க வேண்டியதே எமது ஆட்சியாளர்களின் தலைமையான பொறுப்பாகும். நமது நாடு கொரோனவிற்கான மருந்தைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.எந்த ஒரு நாடாவது இதற்கான தடுப்பு மருந்தினைக் கண்டு பிடிக்கும் வரையாவது நாம் கவனமாக இருக்க வேண்டும்.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மூலமாக மக்களின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தல் சமூக இடைவெளியினைப் பேணுதல் மருத்துவ ஆலோசனைகளை மதித்து நடத்தல் போன்ற விடயங்கள் எமது நாட்டில் கையாளப்படுகின்றன . கொரோனா வைரசின் கொலைப்பசியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மேற்படி நடவடிக்கைகள் அவசியமானவை.
அதற்காகவேஅரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகளை மக்களும் ஏற்று நடக்கின்றனர் . இதனையிட்டு மக்கள் அரசாங்கத்திற்கு கட்டுப்படுகின்றனர் கெளரவப்படுத்துகின்றனர் . அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் கொரோனவினைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைளை மக்கள் ஆதரித்துள்ளனர். அதேவேளைகொரோனா உலகளாவிய ரீதியில் பரவிக்கொண்டிருப்பதையும் இதன் தாக்கத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதையும் அறிந்த பின்னர்பாராளுமன்றம் கலைவதற்கு 06 மாதங்கள் முன்பாகவே பாராளுமன்றத்தினைக் கலைத்தமை தேர்தலுக்கான உத்தரவினைப் பிறப்பித்தமை அறிவியில் பூர்வமான செயலாக அல்லாமல் அதிகாரப்பசி கொண்ட செயலாகவே கொள்ள முடியும் .
தேர்தல் என்கின்ற போது அரசியல் வாதிகளின் பரப்புரைகள் கூட்டங்கள் மக்கள் சந்திப்புக்கள் கருத்தாடல்கள் ஒன்று கூடல்கள் என்று பல நிகழ்வுகள் நடந்தேயாகும் .இந்த நிலையில் சமூக இடைவெளி பேணுதல் மக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தல் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுதல் போன்ற உத்திகள் அரசியல் வாதிகளின் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளால் கட்டாயமாக மீறப்பட்டே ஆகும். அப்படியான நிலையில் கொரோனா வைரசின் கொலைப்பசிக்கு மக்களை தீனி போடுகின்ற திட்டமாகவே தேர்தல் செயற்பாடுகள் அமையும் . ஆயின் ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பசி என்பது கொரோனா வைரசின் கொலைப்பசிக்கு விருந்தாகவே அமையும் .
கொரோனா மக்களைக் கொன்றாலும் குதறினாலும் பரவாயில்லை பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையினைப் பெற்றுஜனாதிபதியின் உச்ச அதிகாரத்திற்கு கடிவாளமிட்டுள்ள 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தினை நீக்கி மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரத்தினை உச்சப்படுத்திஏறத்தாழ ஜனநாயகம் என்ற போர்வைக்குள் சர்வாதிகாரமான ஆட்சி ஒன்றினை மேற்கொள்வதற்கான வேலைத் திட்டத்திற்குரிய ஜனாதிபதியின் விருப்பத்திட்டமாகவே எப்படியாவது தேர்தலை நடத்துவது என்கின்ற பிடிவாதம் அமையப்போகின்றது .
அதாவது ஐக்கியத் தேசியக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டுத் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து இருப்பது என்பதும் எதிர்க்கட்சிகள் கொரோனா தாக்குதலுக்கு கட்டுண்டு கிடப்பதும் ஆட்சியாளருக்கான பொற்காலம் போல் கணிக்கப்படுள்ளது . மொத்தத்தில்இன்றைய இலங்கை அரசியலில் ஆட்சியாளர்கள் அதிகாரப்பசிக்கு முக்கியத்துவம் முன்னுரிமை அளித்துள்ளார்கள். அந்த நிலைப்பாடானது கொரோனா வைரசின் கொலைப்பசிக்கும் சாதகமாகவேயுள்ளது . ஆயின்ஏழைக் குடிமக்களின் வயிற்றுப்பசிவறுமைப்பசி என்பவற்றை துச்சமாக மிதித்து ஆளும் வர்க்கத்தின் அதிகாரப்பசிக்கு விருந்தளிப்பதாகவே தேர்தல் செயற்பாடு அமையப்போகின்றது .அதன் மூலமாக கொரோனா வைரசும் தனது கொலைப்பசிக்கான விருந்தினை இலகுவாகப் பெறும் நிலை உருவாகப்போகின்றது.
தேர்தலை நடத்தினால் மக்கள் நடமாட்டம ஒன்று கூடல்கள் அதிகரிக்கும் சமூக இடைவெளி குறையும் இதுவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த மக்களைத் தேடி கொரோனா வந்து சேரும் .
எனவே ஜனாதிபதி அவர்களும் ஏனைய ஆட்சியாளர்களும் மக்கள் நலம் சார்ந்து செயற்படுவதாக இருந்தால் தேர்தலை ஒத்தி வைத்தாக வேண்டும். . பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் முடியாத நிலையுள்ளதால் பாராளுமன்றத்தினை மீளவும் கூட்டி கொரோனவினைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் திட்டங்கள் நிதிகையாளல்களை மேற்கொள்ள முடியும் . இந்த இடத்தில் ஆட்சியாளர்கள் அறிவுக்கு வேலை கொடுக்காமல்,அதிகாரப்பசிக்குத் தீனி கொடுத்தால் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தே ஆவார்கள் . இதனைத் தவிர்ப்பதற்கு அடிப்படைவாதங்கள் கூட உதவாது என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .
முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கருத்துப்படி “கொரோனா என்பது தடிமனைப் போன்ற சாதாரன நோயை ஏற்படுத்தும் கிருமி. அதனைப்பற்றி அலட்டத் தேவையில்லை” என்ற பாணியில் கூறியுள்ளார் . தேர்தலுக்குத் தயாராகும் இவர் எப்படியாவது தேர்தல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார் .
எனவே அதிகாரத்தேவை முன்னோங்க கொரோனாவின் ஆபத்தினைப் பொருட்படுத்தாமல் கொரோனாவினை தடிமனாக்கி விட்டார். அதிகாரப் பசியானது கொரோனாவின் கொலைப் பசிக்கு வழிகோலுமேயொழிய, வறுமையாளர்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்காது. தேர்தல் வாக்குவேட்டைக்கான காலமில்லை இது. மக்களைக் கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய காலமே இதுவாகும். ஆட்சியாளர்களே மமதையில் மிதக்காமல் மக்களுக்காகச் சிந்தியுங்கள் செயற்படுங்கள்……..!?