வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.போகாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடும்போது வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு பொதுவான சமன்பாடு சாத்தியமில்லை. அதாவது வடக்கு மாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்த மாட்டாது. இந்த அரசியல் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துத்தான் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கிழக்கிற்கான ஒரு தனித்துவமான அடையாள அரசியலை முன்னெடுத்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தளமாகக் கொண்ட ஒன்றுதிரண்ட அரசியல் சக்தியாக மேற்கிளம்பும் போது மட்டுமே கிழக்குத் தமிழர்கள் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்க முடியும். இது ஒன்றே மாற்றத்துக்கான அறிவுபூர்வமான வழியாகும்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்திற்கோ, வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கோ, வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வு அலகிற்கோ எதிரானதல்ல. இன்றைய அரசியல் கள நிலையில் கிழக்குத் தமிழர்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடக் கூடிய தனித்துவமான செயற்பாட்டுத் திறன் மிக்க மாற்று அரசியலே எமது உடனடித் தேவையாக உள்ளது. இதனால் கிழக்குத் தமிழர்களின் தனித்துவ அரசியல் அடையாளமான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் படகுச் சின்னத்திலும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடனும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகிறது.
கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக எல்லாத் தேர்தல்களிலும் தமிழ்த்தேசியம் என்ற கோஷத்தின் மூலம் உணர்ச்சியூட்டப் பெற்று உசுப்பேற்றப்பெற்ற நிலையில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கே புள்ளடி போடும் எந்திரங்களாகவே நாம் இருந்து வந்துள்ளோம். அதனால் நாம் இருந்ததையும் இழந்ததுதான் கண்ட அனுபவம். பட்டு வேட்டிக் கனவில் வாக்களித்து இறுதியிலே இடுப்பிலே கட்டியிருந்த கோவணத்துண்டையும் இழக்கும் நிலையைத்தான் இதுகால வரையிலான தமிழர் அரசியல் நமக்குத் தந்துள்ளது. இனிமேல் எஞ்சியிருப்பதையும் இழக்கப் போகிறோமா? அல்லது எஞ்சியிருப்பதைக் காப்பாற்றி இழந்தவற்றில் சிலவற்றையாவது மீட்கப் போகிறோமா? தேர்தலுக்குத் தேர்தல் ஆளை மாற்றுகிற அரசியல் இனி எமக்கு வேண்டாம் அரசியலை மாற்றுகின்ற ஆட்கள்தான் இன்றைய தேவை. அதற்கான அரிய சந்தர்ப்பமே எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போதைய தமிழரசுக்கட்சி, தற்போது ஈபிஆர்எல்எஃப் தனது இதுகால வரையிலான பெயரையும் சின்னத்தையும் மாற்றி மீன் சின்னத்தில் மறுவடிவம் எடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இவை எல்லாமே யாழ் மேலாதிக்க மேட்டுக் குடி பூர்சுவா சிந்தனைகளின் மீது கட்டமைக்கப்பெற்ற கட்சிகளே. அதாவது ஒரே தென்னையில் காய்த்த ஒரு குலைத் தேங்காய்களே. கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டின் மீது இக் கட்சிகளுக்கு ஆத்மார்த்தமான அக்கறை கிடையாது. இக்கட்சிகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் தேர்தல் காலத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் வாக்குகளே தவிர அம்மக்களின் வாழ்க்கை உயர்வு அல்ல.
கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினொரு ஆசனங்களைக் கொண்டிருந்தும்கூட ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு முதலமைச்சர் பதவியைத் தாரைவார்த்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் கிழக்குத் தமிழர்களின் நலன்களை விட தங்கள் கட்சியின் உயர் மட்டப் பாராளுமன்ற அரசியல் நலன்கள்தான் முக்கியம் என்பது எண்பிக்கப்பட்டுள்ளது
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஆளும் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விளங்கிய போதிலும்கூடக் குறைந்தபட்சம் கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதற்குக் கூட இவர்களிடம் அரசியல் வல்லமை இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகளும் யாழ் மேலாதிக்கச் சிந்தனை கொண்ட புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரும் இவர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கு மாகாண அரசியல் அரங்கில் கருணாஅம்மான் மற்றும் பிள்ளையான் போன்ற ஆளுமைகளும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் மேற்கிளம்பி வருவதை விரும்பவில்லை. இவர்கள் திரைமறைவில் அரசியல் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொண்டு கருணாஅம்மான் மற்றும் பிள்ளையானையும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பையும் தோற்கடிப்பதற்காகக் கைகோர்த்துச் செயற்படுகிறார்கள். கிழக்கு மாகாணத் தமிழர்கள் இச்சதியை முறியடிப்பதற்கான சரியான சந்தர்ப்பமே எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றத்திற்கு எவரை அனுப்பினாலும் எத்தனை பேரை அனுப்பினாலும் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. மாறாகத் தீங்குகளே விளையும்.
கிழக்கு மாகாணத் தமிழர்கள் இனியும் இக்கட்சிகளுக்குத் தலையாட்டிகளாக இருக்கக் கூடாது. கிழக்குத் தமிழர்கள் இனியும் மடையர்கள் என்று பெயர் எடுக்கக்கூடாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கைத் தளமாகக் கொண்ட இக்கட்சிகளையெல்லாம் அதாவது சைக்கிள் சின்னம், வீட்டுச் சின்னம், உதயசூரியன் சின்னம் மற்றும் புதிதாகப் புறப்பட்டுள்ள மீன் சின்னம் என அனைத்தையும் முற்றாக கிழக்குத் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
கிழக்கிற்கான தனித்துவமான அரசியல் தளத்தில் காலூன்றி நின்று ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய இனத்தின் பொதுவான பிரச்சினைகளென்று வருகின்றபோது பொருத்தமான தருணத்தில் பொருத்தமான வகையில் வடக்குடன் கைகோர்ப்பதே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தெளிவான உறுதியான நிலைப்பாடாகும்.
இதுகாலவரையும் வடக்கைத் தளமாகக் கொண்ட யாழ் மேலாதிக்கத் தமிழ் அரசியல் கட்சிகள் கையாண்ட வெறுமனே வார்த்தை ஜாலங்களால் உணர்ச்சியூட்டப் பெற்ற தேர்தல்மைய மரபுவழி அரசியலிலிருந்து விடுபட்டு அறிவுபூர்வமான செயற்பாட்டுத் திறன் மிக்க மக்கள் மைய அரசியலை நோக்கிக் கிழக்குத் தமிழர்கள் திசை திரும்ப வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட காரணங்களின் பின்புலத்தில் கிழக்குத் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படகுச் சின்னத்திற்கும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கப்பல்ச் சின்னத்திற்கும் மட்டுமே திடசங்கற்பத்துடன் வாக்களித்து கிழக்கில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்று கிழக்குத் தமிழர்கள் அனைவரையும் அன்போடு கூவி அழைக்கின்றோம். ஆம்! எறிகிற பொல்லை இம்முறை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிடம் தாருங்கள். நீங்கள் வியக்கும் படியாக இலக்குடன் எறிந்து காட்டுவோம் என்று தெரிவித்தார்.