மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநிலத்தில் சகலதுறைகளிலும் கொடிகட்டிப்பறந்த ஒரு பல்பரிமாண ஆளுமையுள்ள அதிபராக நண்பர் அகிலேஸ்வரனைப் பார்க்கின்றேன். அவர் ஓய்வுபெறும்காலை அவரைப்பாராட்டுவதில் அகமகிழ்வடைகிறேன்.
இவ்வாறு முதலைக்குடாவைச் சேர்ந்த பிரபல அதிபரும் சமுகசேவையாளருமான சிவஞானம் அகிலேஸ்வரன் 37வருட கல்விச்சேவையிலிருந்து 60வது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு இடம்பெற்ற எளிமையான சேவைநலன்பாராட்டுவைபவத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்; கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் புகழாரம் சூட்டினார்.
சமகால கொரோனா சூழலைக்கருத்திற்கொண்டு இந்த எளிமையான வைபவம் கொக்கட்டிச்சோலை முதலைக்குடாவிலுள்ள அவரது இல்லத்தில் அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அதிபர் எஸ்.தேவராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
வரவேற்புரையை அதிபர் வ.சுந்தரநாதன் நிகழ்த்த வாழ்த்துரைகளை ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.தயாசீலன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.
தவிசாளர் மேலும் பாராட்டுரை நிகழ்த்துகையில்:
அதிபர் அகிலேஸ்வரன் கொக்கட்டிச்சோலை( மண்முனை தென்மேற்கு) பிரதேசசபையின் தவிசாளராகவும் கொக்கட்டிச்சோலை ப.நோ.கூ.சங்கத் தலைவராகவும் மகத்தான மக்கள்சேவையாற்றியுள்ளார்.
மக்களுக்காக 3மாதகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்தவர். பல நெருக்கிடைகளுக்கு மத்தியில் அவர் அளப்பரிய சேவையாற்றியமைக்கு பொறுமையுடன்கூடிய அவரது அன்புள்ளம் உதவியிருந்தது எனலாம்.
1994முதல் 1999வரை 5வருடகாலம் கொக்கட்டிச்சோலை பிரதேசசபையின் தவிசாளராகவிருந்த காலத்தில் குறிப்பாக கொக்கட்டிச்சோலைக்கு வரலாற்றில் முதற்தடவையாக மின்சாரம் பெற்றமை உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்தியமை மகிழடித்தீவு மருந்தகத்தை மகப்பேற்றுமனையாக மாற்றியமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
2006முதல் 2013வரையான காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை மண்முனை தென்மேற்கு ப.நோ.கூ.சங்கத்தலைவராக இருந்தகாலத்தில் நெக்கோட் திட்டத்தின்கீழ் லொறியொன்று பெற்றமை நெக்டெப் திட்டத்தின்கீழ் நெற்களஞ்சியசாலையை அமைத்து நெல்கொள்வனவை மேற்கொண்டமை உரமானியத்தை ஆரம்பித்தமை போன்ற காரணங்களால் மட்டு.மாவட்டத்தில. முதலாந்தர ப.நோ.கூ.சங்கமாக பாராட்டப்பட்டது.
இவரது 60வயது அரசசேவையை முடிவுறுத்தினாலும் இவரது பல்பரிமாண ஆளுமையுள்ள சமுக சேவை இந்த பின்தங்கிய பிரதேச சமுகத்திற்கு தொடர்ந்து கிடைக்குமென நம்புகிறேன். அவரது பின்னிட்ட காலம் குடும்பத்துடன் தேகாரோக்கியமாக வாழவாழ்த்துகிறேன் என்றார்.
ஆசிரியை திருமதி நளினி அகிலேஸ்வரனும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் அதிபர் சி.அகிலேஸ்வரன் நன்றிகூறினார்.