மட்டக்களப்பில் மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை -நடேசனின் 16ஆவது நினைவுதினம் அனுஸ்டிப்பு.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(31)காலை
10.30 மணியளவில் மட்டு.ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் செ.நிலாந்தன்,பொருளாளர் பு.சசிகரன் உட்பட மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
நடேசனின் 16வது நினைவுதினத்தை குறிக்கும் வகையில் 16 ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.