வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உரிமையுடன் கூடிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பக்க பலமாக செயற்பட வேண்டும்.
இவ்வாறு அண்மையில் மட்டு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ப.சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது தற்போதைய அரசாங்கத்தின் பலத்தினை அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது அதனை முறையாக தமிழ் மக்கள் வாக்குப்பலத்தின் ஊடாக நிருபித்துக்காட்ட வேண்டும்.அவ்வாறு வாக்கினை நிறைவாக அரச கட்சிக்கு வழங்குவதன் மூலமாக நிறைவான அபிவிருத்தி இலக்கினை அடைய முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம் முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுகின்ற அனைவரும் தமிழர்கள் இது மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள வரப்பிரசாதமாகும்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி அறுபதனாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கினைப் பெறும் அதில் எதுவிதமான ஐயப்பாடும் இல்லை அதனை மேலும் அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கடமை உணர்வு கட்சித் தொண்டர்களுக்கு இருக்கின்றது.
தற்போதைய பிரதம மந்திரி அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பல வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டது மாத்திரமன்றி பலருக்கு அரச துறைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.அவ்வாறான யுகம் மீண்டும் மலர்ந்து கொண்டிருக்கின்றன.அவ்வாறான ஆட்சி முறைக்கு முழுமையான ஆதரவினை மட்டக்களப்பு தமிழ் மக்கள் வழங்கி அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ் பிரதி நிதி உதயமாவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலின் பிற்பாடு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல அபிவிருத்திச் செயற்பாடுகளைஅரசாங்கத்தின் வழிகாட்டலின் மூலமாக முன்னெடுக்க இருக்கின்றோம்.அதற்கு ஏற்றதாக தமிழ் மக்கள் செயற்பட வேண்டும்.
மட்டு மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்காளர்கள் வேற்றுமையினை மறந்து அபிவிருத்தி நோக்கிய பயணத்திற்கு வாக்கினை வாரி வழங்கி ஒற்றுமைப் பலத்தினை வெளிக்காட்ட வேண்டுமெனத் தெரிவித்தார்.