காரைதீவீன் நீண்டநாட்களாக நிலவிவந்த காரைதீவு இந்து பொது மயானத்திற்கான மின்சாரம் நேற்று கிடைத்துள்ளது.
காரைதீவு பிரதேசசபையின் ஏற்பாட்டில் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தொடர்ச்சியாக மேற்கொண்ட அதீத முயற்சியின் காரணமாக நேற்று அது நிறைவேறியுள்ளது.
நேற்று 3வது சபையின் 29ஆவது அமர்வு இடம்பெற்றபின்பு அங்கு சென்ற தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான பிரதேசசபை உறுப்பினர்கள் மின்சார பூர்த்தியையும் பார்வையிட்டனர். அதன்போது நேற்று சபைக்கு புதிதாக இணைந்துகொண்ட புதிய உறுப்பினர்களான எஸ்.சசிக்குமார் கே.குமாரசிறி ஆகியோர் மாலை சூட்டிவரவேற்கப்பட்டதோடு அவர்களும் மின்னிணைப்பு பார்வை விஜயத்திலும் கலந்துகொண்டனர்.
கடந்த 2018உள்ளுராட்சி தேர்தலில் சுயேச்சைக்குழு சார்பில் தெரிவான ஆ.பூபாலரெத்தினம் இரா.மோகன் ஆகியோர் தாமாக விலகிக்கொண்டதன் காரணமாக மேற்படி புதிய உறுப்பினர்கள் நேற்று சமுகமளித்திருந்தனர்.
இலங்கை மின்சார சபையினர் மயானத்திற்கான மின்சார இணைப்பை மேற்கொள்வதில் அவ்வப்போது சிலசில தடங்கல்கள் ஏற்பட்டன. அதன்போதெல்லாம் தவிசாளர் ஜெயசிறில் அதற்கான பரிகாரங்களை மேற்கொண்டு உரிய உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டுஅதனை நிவர்த்திசெய்து வந்திருந்தார்.அதன் காரணமாக மயானத்திற்கான மின்சாரம் வழங்கப்பட்டது.
காரைதீவு கடற்கரைவீதியின் தென்கோடியிலே பத்ரகாளி அம்பாள் ஆலயத்திற்கு அப்பால் மின்சாரம் இருக்கவில்லை. தென்கோடியிலே கண்ணகிகிராமம் என்ற குக்கிராமமும் உள்ளது.அந்த மக்களுக்கும் இதன்பலனாக மின்சாரம் கிடைக்கவுள்ளது.