“அவளுக்கு ஒரு வாக்கு” விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் “அவளுக்கு ஒரு வாக்கு” விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு(WCDM),மற்றும் இளம்பெண் செயற்பாட்டாளர்கள் குழு(RPC) இணைந்து “அவளுக்கு ஒரு வாக்கு” எனும் கூற்றினை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் சனிக்கிழமை(25)மாலை மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் சிறந்த பெண் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்,பெண் வேட்பாளருக்கு ஆண்களும் இணைத்து வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கியவாறு குறித்த வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.

விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பதுடன், அக் கட்சியில் உள்ள பெண் வேட்பாளருக்கு கட்டாயம் தெரிவு வாக்கினை இட்டு பெண் சமத்துவம் பேண வழிவகுக்க வேண்டும் என இவர்கள் குரல்கொடுத்தனர்.

இதுவரை காலமும் மட்டக்களப்பில் இருந்து இரண்டு பெண் வேட்பாளர்கள் மாத்திரம் பாராளுமன்றம் சென்றிருக்கின்றனர். இம்முறை 304 வேட்பாளர்களில் 26 வேட்பாளர்கள் மாத்திரம் பெண் வேட்பாளர்கள்.இது மொத்த விகிதத்தில் 8 வீதம் மாத்திரமே, இந்த பெண் 26 வேட்பாளர்களில் ஒருவரே ஆகினும் நாடாளுமன்றம் செல்ல வைப்பது எமது அனைவரினதும் கடமையாகும் எனும் கருப்பொருளில் இவர்களது இந்த நிகழ்வு அமைந்தமையை காணலாம்.

விழிப்புணர்வு நிகழ்வில் பெண்களுக்கென சமவுரிமை விடயங்களை உள்ளடக்கியவாறு தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ரட்ணஜீவன் ஹூல்,எம்.ஹென்ஷன் மற்றும் கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பு மற்றும் இளம்பெண் செயற்பாட்டாளர்கள் குழு அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

Related posts