வட – கிழக்கு சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பின் மிகவும் பின்தங்கிய கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு தரமான கல்வியை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலணி மற்றும் கல்வி அமைச்சு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வரவேண்டுமென பொலனறுவை றோயல் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற 63வது பேராளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் பிரேரணைகளை முன்வைத்தார்.
மேலும், அவர் பேசுகையில்1974ம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைi தொடர்பாகவும், அங்கு நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படுவதோடு நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் கீழ் உயர் கல்வி அமைச்சு கொண்டு வரப்பட்டிருப்பதனால் அப்பல்கலைக்கழகம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டுமென பேராளர் மாநாட்டில் வலியுறுத்தினார். அத்துடன் சிவில் யுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள கல்வியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பாக சங்கம் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டுமெனவும் கல்வி அமைச்சில் பெருந்தோட்டக் கல்வி தொடர்பாக தனியான பிரிவு உருவாக்கப்பட்டதைப் போன்று வட – கிழக்கு மாகாணங்களின் கல்விக் கட்டமைப்பை மீள் கட்டியமைப்பதற்கு தனியான பிரிவு ஆரம்பிப்பதற்கு இம்மாநாடு வழிகோலவேண்டுமென வலியுறுத்தினார். மேலும் வட கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் தொடர்பான பௌதிக ஆளணிக் கட்டமைப்புக்கள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் கூடிய கவனம் செலுத்தி சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளை அங்கீகரிக்க வேண்டுமென இப்பிரேரணை மீது முன்மொழிவொன்றினை சங்கத்தின் செயலாளர் முன்வைத்தார்.
இந்நிகழ்வில் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்துவரும் சிங்கள முற்போக்கு சகோதரரான ஜயதிலக பண்டார அவர்களின் பாடல்கள் ஒலிக்கப்பட்டதோடு தலைவராக தோழர். பிரியந்த பெர்னாண்டோ (அநுராதபுரம்), பொதுச்செயலாளராக ஜோசப் ஸ்டாலின் (கொழும்பு) ஆகியார் மாநாட்டில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.