சுனாமியால் காணாமல் போகிருந்த மகன் திரும்பிவிட்டார் என்றும் தனது சொந்த மகனே இவர் என்றும் போராடி வரும் தாய்மாருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.
சுனாமியில் காணாமல் போன மகன் 16 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பியதாகவும் தனது மகன் ஏமாற்றப்பட்டதாகவும் இரு தாய்களுக்கிடையில் எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2ம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வளர்ப்புத்தாயாக அடையாளப்படுத்தப்பட்ட நூறுல் இன்ஷான் என்பவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.
அம்முறைப்பாட்டுக்கு அமைய (5) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, சிறுவனின் வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறி கொடுத்ததாகத் தெரிவித்த மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த அபுசாலி சித்தி கமாலியா ஆகியோர் ஆஜராகி தத்தமது பக்க நியாயங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.
குறித்த இவ்விரு தாய்மாரின் நியாயங்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கில் உண்மையான தாயை இனங்காண விவாகரத்துப் பெற்று சென்ற இவ்விரு தாய்மார்களின் கணவன்மார்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி ஆஜராகி மரபணு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
16 வருடங்களுக்கு முன்னர் சுனாமியில் மகனைப் பறி கொடுத்ததாகத் தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா, இப்போது இருப்பது தனது மகன் றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனவும், வளர்ப்புத்தாய் என அடையாளப்படுத்தப்படும் நூறுல் இன்ஷான் என்பவர் தனது மகன் முகம்மட் சியான் எனவும், நீதிமன்ற வாசலில் வைத்து தத்தமது அன்பைப் பரிமாறியமை இங்கு காணக்கூடியதாக இருந்தது.