காரைதீவு பிரதேச மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை பணிப்புரை விடுத்தார்.
சில தினங்களாக உச்சகட்ட கடலரிப்புக்கு இலக்காகி பகுதிளவில் இடிந்து விழுந்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பிலும் ஒலுவில் பிரதேச கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவரது விஜயராம வாசஸ்தலத்தில் சந்தித்து பேச சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நிலமையை தெளிவாக பிரதமருக்கு விளக்கினார்.
கடலரிப்பு காரணமாக அந்த ஜனாஸா மையவாடி சுவர் பகுதியளவில் இடிந்து விழுந்தது. மேலும் சுவர் இடிந்து விழாமல் காக்க அப்பிரதேச மக்களால் மணல் மூட்டை கட்டிப்போடும் தற்காலிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது பாரியளவில் வெற்றியளிக்கவில்லை. என்பதுடன் உடனடியாக பெரியளவு கருங்கற்களை கொண்டு தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தார்.
கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் உடனடியாக நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேரடியாக கரையோர பேணல் திணைக்கள அழுவலகத்திற்கு நேரடியாக சென்று தற்போதைய நிலை குறித்து விளக்கியவுடன் உரிய அதிகாரிகளை அழைத்து பணிப்பாளர் நாயகத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்க பணிப்புரை வழங்கப்பட்டது.
இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்க குறித்த துறைசார் நிபுணர்கள், பொறியலாளர்கள் பணிக்கப்பட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.