அம்பாறை மாவட்ட மீனவர்கள் ஒலுவில் துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கும் தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்குமிடையிலான சந்திப்பொன்று சாய்ந்தமருதில் வெள்ளிக்கிழமை (30) மாலை நடைபெற்றது.
இதன்போது வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அம்பாறை மாவட்ட கரையோரங்கள் கடலரிப்புக்கு இலக்காகி மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளமை, ஒலுவில் துறைமுகத்தில் மண்வார்ப்பு உள்ளதால் இயந்திர படகுகளை தரித்து நிறுத்துவதில் உள்ள சிக்கல்கள், மீன்பிடியில் பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி மிக ஆழமாக அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாச, மற்றும் சம்மேளன பிரதிநிதிகள் தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு தெளிவுபடுத்தினர்.
சகல விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா இவ்விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலந்துகொண்டிருந்த மீனவர்களுக்கு நம்பிக்கை வெளியிட்டார். இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.