அயல் மாவட்டங்களில் காடுகள் இல்லாதது போன்றும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் காடுகள் இருப்பது போன்றும் அயல் மாவட்ட பெரும்பான்மை இனத்தவருக்கு சேனைப் பயிர்செய்கைக்காக காணிகள் கொடுப்பதென்பது மட்டக்களப்பில் எதிர்காலத்தில் சிறுபான்மையினரின் இனப்பரம்பலைக் குறைப்பதற்காக ஆளுநர் உட்பட ஒரு சில அதிகாரிகள் அரசியற் பின்பலத்துடன் செயற்படுத்தும் திட்டமோ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மயிலத்தமடு, மாதவணை காணி விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களை எமது மாவட்டத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடானது சேனைப் பயிர்ச்செய்கைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழர்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்காகவோ என்ற சந்தேகம் எழுகின்றது.
பெரும்பான்மை மக்களை இங்கு சேனைப்பயிர்ச்செய்கை என்ற போர்வையில் குடியமர்த்தி அவர்களுக்கான வசதிவாய்ப்புகளைக் கொடுத்து எதிர்காலத்தில் அந்த மக்களை நிரந்தரமாகக் குடியேற்றி எதிர்காலத்தில் வவுனியா மாவட்டம் போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாகாணசபைக்கோ அல்லது நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் பெரும்பான்மை பாராளுமன்ற பிரதிநிதியை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் உட்பட ஒரு சில அதிகாரிகள் அரசியற் பின்பலத்துடன் ஈடுபடுகின்றார்களோ எனவும் நாங்கள் சந்தேகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஏனெனில் சேனைப் பயிர்ச்செய்கைக்காக எமது பிரதேசத்திலே அயல் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் வருகின்றார்கள் என்றால் அவர்களின் மாவட்டங்களிலே சேனைப்பயிர்ச் செய்கை செய்வதற்கு காடுகள் இல்லாமல் அவர்கள் இங்கு கொண்டு வரப்படவில்லை.
அவ்வாறிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் காடுகள் இருப்பது போல் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரதேசத்திற்குள் அவர்களைக் கொண்டு வருவதானது திட்டமிட்ட செயற்பாடாகவே எம்மால் பார்க்க முடிகின்றது என்று தெரிவித்தார்.