எமது சுதேச வைத்திய முறைமைகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் வெற்றி கண்டு இருப்பது தெரிய வந்து உள்ளது என்று நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பின் தலைவருமான சமூக சேவையாளர் அஹமட் லெப்பை அன்ஸாரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி குடியேற்ற கிராமத்தில் உள்ள எம். எஸ். காரியப்பர் பாடசாலையில் கொரோனா விழிப்பூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ. எல். ஏ. நாபித் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பேராளர்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவின் இணைப்பாளர்களான தனுஸ பரணமான மற்றும் அமினுடீன், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜித் மௌலவி, கிராம சேவையாளர் நிஸ்ரில், ஓய்வு நிலை அதிபர் எம். எல். ஏ. எம். கையூம், லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பின் செயலாளர் அபுல் லைஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
டாக்டர் நக்பர் இங்கு உரையாற்றுகையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு எமது சுதேச வைத்திய முறைமைகள் கையாளப்பட்டு வெற்றி அடைந்திருக்கின்றன, முன்பெல்லாம் காய்ச்சல் வந்தால் கொத்து மல்லி அவித்து குடிப்பார்கள், மஞ்சளை தமிழர்கள் வீடுகளில் கிருமி நாசினியாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர், இந்நாட்டு அரசாங்கம் கொரோனா சம்பந்தப்பட்ட விடயங்களை மிக கவனமாக கையாண்டு வருகின்றது, சுகாதாரம், சுதேச வைத்தியம் ஆகியன ஒரே அமைச்சில் உள்ளன, சுகாதார துறையினர் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் அவசர சூழலில் மிகவும் கஷ்டப்பட்டு ஈடுபட்டு இருக்கின்ற இத்தருணத்தில் ஆயுர்வேத மருந்துகள் மூலமாக கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என்கிற தகவலை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையை உருவாக்க முடியாது என்பதில் நாம் பற்றுறுதியாக உள்ளோம், அதனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என்கிற எண்ண கருவுடன் எமது அமைச்சு சுவ தாரிணி என்கிற பெயரிலான ஆயுர்வேத பான மருந்துக்கான பொதிகளை அறிமுகம் செய்து இருக்கின்றது, பொதுவான சுகாதார நடைமுறைகளுடன் சேர்த்து ஆயுர்வேத நடைமுறைகளையும் பின்பற்றுவது உசிதமானது நிந்தவூ ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் இதய கதவுகள் எப்போதும் மக்களுக்கு திறந்திருக்கின்றன என்றார்.
நிறைவாக இவரும், பேராளர்களும் மருந்து பொதிகளை பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கையளித்து வைத்தனர்.